தமிழின் முதல் ரோபோடிக் காதல் தொடரில் முகேன்ராவ் - ஹன்சிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் வெப்தொடர் தமிழின் முதல் ரோபோடிக் காதல் தொடராக உருவாகவுள்ளது. இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.
இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது: இந்த தொடரில் பங்குகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. உலகளவில் பிரமாண்ட படைப்புகளை தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவது பெருமை. இது என்னுடைய முதல் இணைய தொடர். நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள். எங்கள் தொடரின் தலைப்பை தமிழகத்தின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சியில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்கு நன்றி.
நடிகர் முகேன் ராவ் கூறியதாவது: இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன், அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கைகோர்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன். மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.
இயக்குநர் ராஜேஷ் M கூறியதாவது: இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி.
“மை3" தொடர் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். “மை 3" டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments