குடியரசு தலைவராக மீண்டும் ஒரு விஞ்ஞானி?
- IndiaGlitz, [Saturday,June 17 2017]
இந்திய குடியரசு தலைவர்களில் பெஸ்ட் யார் என்று கேட்டால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது அப்துல்கலாம் அவர்கள் தான். முதன்முறையாக ஒரு விஞ்ஞானி, எந்த கட்சியையும் சார்பில்லாத ஒரு குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாடே பெருமை அடைந்தது. அதுமட்டுமின்றி குடியரசு தலைவர் பதவியை தனது சுயநலத்திற்காக சிறிது கூட பயன்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டார். மேலும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காததால் அவர் மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வரும் ஜூலை 17ஆம் தேதி அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் பொதுவேட்பாளர் திட்டமும் உள்ளது.
இந்நிலையில் பிரபல வேளாண் விஞ்ஞானியும் தமிழருமான எம்எஸ் சுவாமிநாதன், குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று, சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, விரைவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது.
சிவசேனாவின் இந்த முயற்சி வெற்றியடைய தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. மீண்டும் ஒரு தமிழர், மீண்டும் ஒரு விஞ்ஞானி குடியரசு தலைவர் பதவிக்கு வந்தால் தமிழர்களுக்கு இதைவிட பெரிய பேறு ஏதும் இல்லை. தமிழக அரசியல்வாதிகள் இதற்கு ஒத்துழைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.