இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த தோனி கடந்த ஆண்டு சுதந்திரத் தினத்தின்போது ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதையடுத்து அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்ட தோனி அதுமுதல் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தார். இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகளுக்காக கடந்த மார்ச் முதலே தோனி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அதோடு தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 8 அணி வீரர்களும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் வீரர்கள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் 14 ஆவது ஐபிஎல் சீசனுக்காக தோனி மும்பை வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்றுமாலை கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சிஎஸ்கே மோதவுள்ளது.
இந்நிலையில் தல தோனியின் தந்தை பான் சிங் தோனி மற்றும் தாயார் தேவகி தேவி இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் உள்ள பிளஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களின் நாடித்துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.