கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஹீரோவான தமிழக வீரர்… வியக்கும் தோனி!

சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று (22.11.2021) டெல்லியில் நடைபெற்றது. கர்நாடகத்திற்கு எதிராக களம் இறங்கிய தமிழக அணி இந்த போட்டியில் வெற்றிப்பெற்றது. மேலும் இதில் விளையாடிய தமிழக வீரர் ஒருவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

உள்ளூர் போட்டிகளில் பிரபலமான சையத் முஷ்டக் தொடரின் இறுதிப்போட்டி கர்நாடக அணிக்கும் தமிழக அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் களம் இறங்கிய கர்நாடகா படு சொதப்பலாக விளையாடி 20 ஓவர் முடிவில் 151 ரன்களைக் குவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து 152 என்ற இலக்குடன் விளையாடிய தமிழக அணி முதலில் படு அசத்தலாக ஆடினாலும் மிடில் ஆர்டர் போட்டியில் சரியத் துவங்கியது. இதனால் ஒரு கட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தவித்த தமிழக அணி 17 ஓவர் முடிவில் 116 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து 17 பந்துகளுக்கு 36 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் தமிழக வீரர்கள் மாட்டிக்கொண்டனர்.

இந்தச் சூழலில் களம் இறங்கியவர்தான் ஷாருக்கான். ஐபிஎல் போட்டிகளுக்காக பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இவர் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி கர்நாடக வீரர்களை துவம்சம் செய்திருந்தார். ஆனாலும் 1 பந்துக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அசராமல் விளையாடிய ஷாருக்கான் கடைசி பந்துக்கு சிக்ஸரை பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இதனால் ஷாருக்கானை இந்தியக் கிரிக்கெட் அணியிலேயே இடம்பெற செய்யலாம் என்று மூத்த வீரர்கள் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைசி பந்து, சிக்ஸர் என்ற லாஜிக்கை உண்மையாக்கி இவர் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் சையத் முஷ்டாக் போட்டியின் இறுதிக்காட்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த எம்.எஸ்.தோனி, கடைசி பந்துக்கு சிக்ஸர் அடித்த ஷாருக்கானை பார்த்து மிரண்டு போயிருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.