close
Choose your channels

தோனி பற்றி ஒரு ரசிக்கத்தக்க படம்

Friday, September 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் ஒரு மதம் போல் பின்பற்றப்படும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பற்றி இதுவரை எந்தப் படமுமே வந்ததில்லை என்று சொல்லிவிடலாம். அப்படி இருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் புகழ்பெற்ற வீரரும் வெற்றிகரமான கேப்டனும் ஆன மகேந்திர சிங் தோனி பற்றி ஒரு படம் வருகிறது அதுவும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் காலத்திலேயே வருகிறது என்பது நாடு முழுவதும் எவ்வளவு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இந்தி மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் தோனிக்கும் கிரிக்கெட்டுக்கும் இருக்கும் மாபெரும் ரசிகர் படையின் காரணமாக தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் படத்துக்கும் அமோகமான எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவு நிறைவேறியிருக்கின்றன என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

பிகார் மாநிலம் ராஞ்சியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் மகேந்திர சிங் தோனி, பள்ளியில் ஃபுட்பால கோல் கீப்பராக இருக்கிறார். பள்ளி கிரிக்கெட் அணியின் அவசரத் தேவைக்காக அவருக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராகவும் அடித்து ஆடும் பேட்ஸ்பேனாகவும் சிறப்பாக ஜொலிக்கிறார்.

பள்ளிகளுக்கிடையிலான, கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈரிக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சேரும் வாய்ப்பை ஒரு நூலிழையில் இழக்கிறார். அதனால் ரயில்வெத் துறையில் டிக்கெட் கலெக்டராக வேலை கிடைக்கிறது.

அங்கிருந்து சர்வதேச இந்திய அணியில் எப்படி சேர்கிறார். அதற்குப் பின் நடப்பது என என்பதே மீதிக் கதை.

அதிகம் வளர்ச்சியடையாத மாநிலத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்ப் பிடிக்கிறார் என்பதையும் அதற்கான போராட்டத்தையும் காண்பிக்கிறது முதல் பாதி. இவை அனைத்தும் பெருமளவில் நம்பகத்தன்மையுடனும் ரசிக்கும் விதத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எவ்வளவு உண்மை எவ்வளவு இயக்குனரின் கற்பனை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டையும் தரம் பிரித்துப் பார்க்க முடியாத அளவு திரையில் நிகழ்பவை யதார்த்தமாகவும் மனதுக்கு நெருக்கமாகவும் இருக்கின்றன.

கிரிக்கெட் அணியில் நுழைய தோனிக்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆனது என்பதை பிசிசிஐ-யின் அணித் தேர்வில் நிகழும் அரசியல் லாவணிகளைத் தொடாமாலயே சுவாரஸ்யமாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கும் இந்த யோசனை பாராட்டத்தக்கது.

நடுத்தர குடும்பம் என்றவுடன் செண்டிமெண்டையும் மெலோடிராமாவையும் போட்டுப் பிழியாமல் இருந்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். தோனியின் பெற்றோர், அக்கா, நண்பர்களாக வருபவர்கள், கோச்சாக வருபவர், ரயில்வே வேலையில் உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரியாக வருபவர் என அனைவரும் தோனியின் லட்சியத்துக்கு ஆதரவளிப்பவர்களாகவும் துணை நிற்பவர்களாகவும்தான் வருகிறார்கள். தோனிக்கு அவரது சுற்றத்திலிருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதையும் மீறி அவரது போராட்டம் வலிமையாக சித்தரிக்கப்பட்டிருப்பது பெரிய விஷயம்.

ரஞ்சிப் போட்டியில் யுவராஜ் சிங்காக வருபவர் (ஹெர்ரி டாங்ரி) யுவராஜ் சிங் போலவே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் எங்கே இவரை வில்லனாக்கிவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. யுவராஜ் சிங் தொடர்பாக ஒரு காட்சி வருகிறது. அது முதல் பாதியின் ஆகச் சிறந்த காட்சி என்றே சொல்லலாம். குறிப்பாக யுவியின் ரசிகர்கள் இந்தக் காட்சியை தவறவிடவே கூடாது.

தோனி சிறுவயதிலிருந்தே கடினமாக உழைக்கும் மிகத் திறமையான கிரிக்கெட் வீரராக இருந்தவர், விளையாட்டில் மிகத் தீவரமான கவனம் செலுத்திவந்தவர், இவை மட்டுமில்லாமல் விளையாட்டிலோ வாழ்விலோ வெற்றி தோல்விகளுக்குப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவராக அதிகம் உணர்ச்சிவசப்படாத நிதானமான ஆனால் தெளிவான அணுகுமுறை கொண்டவர் என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பாதி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு இரண்டாம் பாதியில் பெருமளவில் தொய்வடைகிறது. இந்தியாவின் சர்வதேச அணியில் தோனி சேர்ந்தபின் படத்தின் சுவாரஸ்யத்தன்மை பெருமளவில் மட்டுபட்டுவிடுகிறது.

அணியில் சேர்ந்த பின் தோனியின் வளர்ச்சியை ஒரு சில கிர்க்கெட் போட்டிகளின் கோப்புக் காட்சிகளைக் காண்பித்து சொல்லிவிடுகிறார்கள். அவரை இந்த உயரத்துக்கொண்டு சென்ற விஷயம், ஆங்கிலத்தில் career defining moment என்று சொல்வார்களே அது எதையுமே சொல்லவில்லை. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற மாபெரும் ஆளுமைகளைக் கடந்து தோனி எப்படி கேப்டனாக உயர்ந்தார் என்று சொல்லப்படவே இல்லை.

அணியின் மற்ற வீரர்கள் மற்றும் தோனியின் உறவு எப்படி இருந்தது என்று காண்பிக்கப்படவில்லை. ஒரு சில அணித் தேர்வுக் கூட்டங்களில் மூத்த வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்புவது பற்றி தோனி பேசுவது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஆனால் சச்சின், கும்ப்ளே போன்றவர்கள் மீது தோனி அபாரமான மதிப்பு வைத்திருந்தார். அது வெளிப்பட்ட தருணங்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றையாவது காண்பித்திருக்கலாம்.

இதெல்லாம் இல்லை என்பது மட்டும் பிரச்ச்னை இல்லை. இதற்குப் பதிலாக தோனியின் இரண்டு காதல்கள் மிக நீண்ட அளவில் காண்பிக்கப்படுகின்றன. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி இந்தக் காட்சிகளுக்குத்தான்.

ஒரு பயோபிக் படத்தில் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்கள் காண்பிக்கப்பட வேண்டியவைதான். அதுவும் அணியில் தன் நிலை ஸ்திரமடையாமல் இருக்கும் நிலையில் காதலை ஏற்பதா வருங்காலத்தை கவனிப்பதா என்ற தோனியின் சஞ்சலம் காட்சிபத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால் காதல் காட்சிகளை இவ்வளவு நீளமாக காண்பித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை கிரிக்கெட்டில் ஆர்வமில்லாதவர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் காட்சிகளை சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது.

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோனியின் கிரிக்கெட் வரலாற்றில் மிக உயரிய தருணம். ஆனால் அதையடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னொரு உலகக் கோப்பை நடந்து அதில் அவரது தலைமையில் இந்தியா அரை இறுதி வரை முன்னேறியது. இதையெல்லாம் காண்பிக்காதது சற்று ஏமாற்றமே. அதேபோல் ஐபில் போட்டிகள் பற்றி பெரிதாக எதுவும் காண்பிக்காததும் சென்னை ரசிகர்களை ஏமாற்றலாம்.

படம் மூன்று மணிநேரம் ஓடுவது ஒரு பயோபிக் இவ்வளவு நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவைக்கதிகமான பல காட்சிகள் (இரண்டு பாதிகளிலும், குறிப்பாக இரண்டாம் பாதியில்) சேர்க்கப்பட்டிருப்பது போன்ற உணர்வைத் தவிரிக்க முடியவில்லை.

இந்தக் குறைகளையும் மீறி இரண்டாம் பாதியில் ரசிக்கத்தக்க காட்சிகள் உள்ளன. தோனியின் முக்கியமான போட்டிகள் குறிப்பாக 20-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி (2007 ) வெற்றி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி (2011) ஆகியவை அதிகமாக காட்டப்பவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடும். இந்தப் போட்டிகளின் போது தோனியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பது அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிகளில் நிஜத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகள் காண்பிக்கப்படுகின்றன. அவற்றில் நிஜ தோனியின் இடத்தில் படத்தில் தோனியாக நடித்திருப்பவரின் உருவத்தை சிறப்பாக பொருத்தியிருப்பது காட்சி அனுபவத்தை மெருகேற்றுகிறது.

படம் தொழில்நுட்ப அம்சங்களில் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.

படத்தில் நடக்கும் கிரிக்கெட் காட்சிகள் அனைத்தும் சினிமாத்தனமான கிரிக்கெட்டாக இல்லாமல் நிஜமான கிரிக்கெட் போட்டியைப் போல் இருக்கின்றன.

சஷாந்த் சிங் ராஜ்புத் தோனி போலவே இருப்பது மட்டுமல்லாமல் தோனியின் அத்தனை கிரிக்கெட் ஷாட்டுகளையும் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார். அதற்கு பல மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்.அந்த உழைப்பின் மேன்மை திரையில் தெரிகிறது. நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

தோனியின் அப்பாவாக வரும் அனுபம் கெர் வழக்கம்போல் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அக்காவாக நீண்ட காலத்துக்குப் பின் நடித்திருக்குன் பூமிகா மனதில் நிற்கும் நடிப்பைத் தருகிறார். ரயில்வே பணியில் தோனியுடன் பணியாற்றும் சத்யா அண்ணாவாக வருபவர் நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கிறார். அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டர் சிர்ப்பலையில் மூழ்குகிறது.

தோனியின் முன்னாள் காதலி பிரியங்காவாக வரும் திஷா படானி, காதல் மனைவி சாக்‌ஷியாக வரும் கியாரா அத்வானி ஆகியோர் அழகாக இருப்பதோடு பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

மற்ற துணை நடிகர்கள் அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சஞ்சய் செளத்ரியின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக தோனியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்கள் நிகழும் தருணங்களுக்கு பின்னணி இசை மேலும் சிறப்பு சேர்க்கிறது. அமால் மாலிக் மற்றும் ரோசக் கோலி அகியோரின் இசையில் பாடல்கள் தமிழ்ச் சூழலுக்கு பொருந்தாததொடு இடைச்செறுகல்களாகவும் இருக்கின்றன.

சந்தோஷ் துண்டியிலின் ஒளிப்பதிவு ராஞ்சி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளை அவற்றின் அசலான நிறத்தோடு பதிவு செய்திருக்கின்றது. கார்க்பூர் ரயில் நிலையத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அது மிகப் பெரியதாக இருப்பதைச் சொல்ல டாப் ஆங்கிள் ஷாட்டைப் பயன்படுத்தியிருப்பது ஆகியவை கவனம் ஈர்க்கும் உத்திகள்.

ஸ்ரீநாராயண் சிங்கின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைக் குறைக்கப் பயன்பட்டிருக்கலாம். மற்றபடி அவரது பணி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக நிஜமாக நடந்த கிரிக்கெட் காட்சிகளை படத்துடன் இணைத்திருக்கும் விதம் அவரது திறமைக்கு சான்றாக உள்ளது.

ஒரு நிஜ விளையாட்டுவீரர் அதுவும் நிகழ்காலத்தில் கேப்டனாக ஜொலித்துக்கொண்டிருப்பவரின் வாழ்க்கையை வைத்து ஒரு ரசிக்கத்தக்க படத்தைக் கொடுக்கும் சவாலில் இயக்குனர் நீரஜ் பாண்டே மற்றும் அவரது குழு வென்றுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் அனுபவங்களை இன்னும் அதிகமாக சேர்த்திருந்தால் இது ஒரு சிறப்பான பயோபிக் படமாக இருந்திருக்கும் என்பதையும் சொல்லி ஆக வேண்டும்.

மதிப்பெண்: 3/5

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment