'தோனி' படத்தில் சுஷாந்துடன் நடித்தவரும் தற்கொலை: அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தோனி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென தனது மும்பை வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோனி படத்தில் நடித்த சுஷாந்த்சிங் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில், அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தோனி படத்தில் சுஷாந்த்சிங் நண்பராக நடித்த சந்தீப் நஹார் என்பவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் ஆகியவை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். தோனி படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,