எனக்கா ஃபேர்வெல்? ஓய்வு குறித்து டோனியின் கருத்தால் உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தத்துப்பிள்ளையான டோனியின் ஓய்வுக் குறித்த பயத்தில் தொடர்ந்து ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் அவர் ஓய்வுப்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் தனது ஓய்வுக்குறித்து அவர் பேசியுள்ள கருத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

16 ஆவது ஐபிஎல் தொடரின் 45 ஆவது லீக் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உடல்நிலை காரணமாக நேற்றைய போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் அந்த அணிக்கு க்ருணால் பாண்டியா தலைமை தாங்கினார். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

லக்னோவில் நேற்று காலை முதலே மழைபெய்துவந்த நிலையில் நேற்று லக்னோ அணி 19.2 ஓவருக்கு 7 விக்கெட்டுடன் 125 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்யத் துவங்கியது. மாலை 7 மணிவரை இந்த மழை தொடர்ந்ததால் இனி ஆட்டம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை என முடிவுசெய்த நடுவர்கள் போட்டியை ரத்துசெய்வதாக அறிவித்ததுடன் லக்னோ, சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்குவதாக அறிவித்தனர். இதனால் சென்னை ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் போட்டிக்கு இடையில் கிரிக்கெட் வருணனையாளர் டேனி மாரிசன் உங்களுடைய கடைசி ஐபிஎல் சீசனக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஃபேர்வெல் எப்படியிருக்கிறது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த டோனி இது என்னுடைய கடைசி ஐபிஎல் என்று நீங்கள்தான் முடிவு எடுத்திருக்கிறீர்கள். நான் சொல்லவில்லை என கூறிவிட்டு சிரித்தார்.

டோனியின் இந்தக் கருத்தைக் கேட்ட ரசிகர்கள் மைதானத்தில் இருந்தபடியே கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பேசிய டேனி மாரிசன் அடுத்த ஐபிஎல் போட்டிக்காகவும் டோனி லக்னோவிற்கு வருவார் என்று கூறி கூட்டத்திற்கு நடுவில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.