எம்.எஸ்.தோனி வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? ரசிகர்களை கலங்க வைக்கும் முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்கமுடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் இருந்துவரும் மகேந்திர சிங் தோனி குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு பெயர்போன தோனி குறித்து ரசிகர்கள் அறியாதது ஒன்றுமில்லை. போட்டி நேரத்தில் இக்கட்டான சூழலிலும் நிதானமாக இருந்து போட்டியை வெற்றி நோக்கி நகர்த்திவிடும் திறமை பெற்றவர். கேப்டன் கூல் என்றே ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர். 3 வித போட்டித் தொடர்களில் இந்திய அணிக்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர். தற்போது இந்திய அளவில் அதிக சொத்துகளை வைத்திருக்கு விளையாட்டு வீரராகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்ததையும் அதில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்ததும் ரசிகர்கள் அறிந்ததுதான். அந்த திரைப்படத்தில் தோனி இந்திய அணிக்கு தேர்வாகும் முன்னரே ஒரு இளம்பெண்ணுடன் காதலில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஏதோ படத்திற்காக எடுக்கப்பட்டது என்றுதான் நினைத்து வருகின்றனர். காரணம் தோனி தன்னுடைய கல்லூரி தோழியான சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் உண்மையில் இந்திய அணிக்காக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு ஒரு காதல் இருந்து இருக்கிறது. அதன் மூலம் தீராத வலியை தோனி உணர்ந்திருக்கிறார். அதுகுறித்த தகவல்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2002- 2003 வாக்கில் தோனி பிரியங்கா ஜா என்பவரை காதலித்து இருக்கிறார். தோனியை முழுமையாக அறிந்த அவர் சந்திக்கும் போதெல்லாம் தோனிக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளார். திருமணம் செய்துகொண்டால் பிரியங்காவுடன் தான் என்று தோனி முடிவு செய்த நிலையில் 2004 ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்று விக்கெட் கீப்பராக 4 ஸ்டம்பிங் மற்றும் 6 இன்னிங்ஸில் விளையாடி 362 ரன்களை குவித்து கங்குலியின் கவனத்தை ஈர்த்து இந்திய அணிக்குள் இடம் பிடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் இந்தியாவில் பிரியங்கா ஜா விதியின் வசத்தால் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்தபோது தோனி வெளிநாட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி திரும்ப இந்தியா வந்தபோது பிரியங்கா இறந்த செய்தியைக் கேட்டு சாலைகளில் அழுது புலம்பியதாக அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விரும்பிய கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிப்பெற்ற தோனி தான் விரும்பிய பெண் உயிருடன் இல்லை என்று வருந்தியிருக்கிறார். இதையடுத்து முழுவதும் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவருக்கு முதல் காதலில் இருந்து வெளிவருவதற்கே நீண்ட நாட்கள் எடுத்திருக்கிறது. அந்த வகையில் 7 வருடங்களுக்குப் பிறகு சாக்ஷியை சந்தித்து அவர் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தோனியின் மகிழ்ச்சிக்குப் பின்னால் இப்படியொரு சோகக்கதை ஒளிந்திருக்கிறது. உண்மையில் நடைபெற்ற இந்தக் காட்சிதான் படத்திலும் காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு உண்மையா என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தோனியின் முதல் காதல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று அது வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments