தென்னகத்தில் தான்தான் தென்னவன் என் நிரூபித்த சென்னை:
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்தடுத்து இரண்டு போட்டிகள். இரண்டும் தென் இந்தியாவின் மற்ற இரு அணிகளோடு என சென்னையின் பயணம் கடத்த 4 நாட்களில் செம்ம சூடு, சென்னை வெயிலைப்போலவே. ஹைதராபாதில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதலிடம் சென்றாலும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சென்னை - பெங்களூரு போட்டிக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்திருந்தது. ஒரு படி மேலே சென்று, பெங்களூருவின் ரசிகர்கள், "நீங்கள் கோப்பையைக் கூட வெல்லத்தேவையில்லை, ஆனால் சென்னையிடம் மட்டும்த் தோற்றுவிடாதீர்கள்.." என கீச் கீச்சென கீச்சிக்கொண்டிருந்தனர் டிவிட்டரில்.
'டாஸ' வென்ற தோனி சிரித்துக்கொண்டே 'சேஸிங்' செய்வதாக அறிவிக்க, கடந்த இரண்டு போட்டிகள் ஐபிஎல்லில் அதிக ரன்களைக் குவிக்காத போட்டிகளாக இருந்தாலும் விறுவிறுப்பாகவே சென்றது. என்னதான் போட்டிகள் பந்துவீச்சிற்கு சாதகமாக 'க்ளாஸாக' இருந்தாலும், மைதானத்தில் குழுமியிருக்கும் ஆயிரமாயிரம் ரசிகர்களுக்கு சிக்ஸர்கள் பறந்தால்தான் ஆனந்தம். பெங்களூரு சின்னசாமி மைதானம் என்றாலே வானவேடிக்கைகள்தான். டி காக், விராட் கோஹ்லி பொறுமையாக அணுகினாலும், ஓவருக்கு 9-10 ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்தனர். தாகூரின் பந்தை 'லாஃப்ட்' செய்ய முற்பட்டு கோஹ்லி ஆட்டமிழக்க, ஏபி டி வில்லியர்ஸ் வருகையை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதற்க்கேற்றவாறு ஆரம்பமே சிக்ஸருடன் ஆரம்பிக்க பெங்களூரு அணி பலமான அடித்தளத்தை போட்டது.
நேற்றையப் போட்டியில் 'பெவிலியன்' பக்கத்திலிருந்து வீசப்பட்ட பந்துகள் அதிகமாக சிக்ஸர்களாக மாறியது. காரணம் ஒரு பக்கம் பௌண்டரி சராசரிக்கும் குறைவான தூரத்தில் இருக்கவே, 'ஸ்லாக் ஸ்வீப்', 'லாஃட்' என ஆரம்பித்தார். தாகூரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில என, 'மிட் விக்கட்' ஆரம்பித்து 'லாங் லாங் ஆஃப்' வரை ராக்கெட் விட, மினிமம் 230 இருந்தால் ரசிகர்களின் எதிப்பார்ப்பாக இருந்தது. ஆனால் ப்ராவோ ஒரு பக்கம் டி காக் விக்கட்டை வீழ்த்தி ரன்களைக்கட்டுப்படுத்த, அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் 'beml end' பக்கம் ஆட வந்ததும், தாஹிரைக்கொண்டு வில்லியர்ஸால் எளிதில் அடிக்கமுடியாத வண்ணம் ஸ்டம்பிற்கு வெளியே வீசி சுழல வைக்க, அதுவரை மைதானத்தின் சிறிய பகுதியை டார்கெட் செய்து அடித்து வந்த வில்லியர்ஸ் தப்பான ஷாட் அடித்து வெளியேறினார். வில்லியர்ஸ் விக்கட்டை கிட்டத்தட்ட மற்றவர்களின் மீது போட்ட அழுத்தத்தின் மூலமாகவே சென்னைப் பெற முடிந்தது. அதன் பின்பு மன்தீப் சிங் மட்டுமே நிலைத்து நின்று கொஞ்சம் அடிக்க, சுந்தர் இறுதியாக ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து பெங்களுரு இருநூறு ரன்களைக் கடக்க உதவினார்.
பவான் நெகி, காலின் என இரண்டு ஆல் ரவுண்டர்களைக் எக்ஸ்ட்ராவாக சேர்த்துக்கொண்டு களமிறங்கிய பெங்களுரு முதல் ஓவரிலேயே சென்னைக்கு அதிர்ச்சியளித்தது. நெகியின் வீச்சில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டுவிட்டு அடுத்தப் பந்திலேயே வாட்சன் வெளியேறினார். ராயுடுவுடன் ரெய்னா இணைய, சென்ற ஆட்டத்தில் எங்கே விட்டாரோ அங்கே இருந்து தொடங்கி அடிப்பதுப்போல ராயுடு அட்டகாசமாக சுந்தரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்கவிட சென்னை தன்னுடைய சேஸிங்கை பிரமாதமாக ஆரம்பித்தது.
ஆனால் ஐம்பது ரன்களைக்கடந்திருந்த வேளையில் ரெய்னா யாதவின் வீச்சில் வெளியற, கொல்கத்தாவிற்கு எதிராக துவம்சம் செய்த பில்லிங்ஸ் களமிறங்கினார். அவரும் அதிகம் நீடித்திருக்கமால் அவுட்டாக. ஜடேஜாவிற்கு மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்தது. சாஹல் அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி பெங்களூருவின் வெற்றியைச் சாதகமாகும் முயற்சியில் ஈடுபட்டபோது தோனி களமிறங்கினார். துவக்கம் முதலே அடித்து ஆட முற்படும் இந்த தோனி 3.0 தன்னுடைய இளமைக் காலங்களை மீட்கும் வேலையில் இறங்கியிருக்கிறாரோ என்று யோசிக்கும் வகையில் பக்காவாக அடித்து ஆடினார். ஒரு பக்கம் ராயுடு கிடைக்கும் கேப்பிலெல்லாம் பௌண்டரிகள் விலாச, மீண்டும் இறுதி ஐந்து ஓவர்களில் 70 ரன்கள் தேவை என வந்தபோது சென்னை ரசிகன் கொண்டத்துவங்கிவிட்டான். அவனுக்குத் தெரியும் இது எவ்வாறு சாத்தியமாகுமென்று.
ஆண்டர்சன் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்த ராயுடுவிற்கு யாதவ் வாழ்க்கை கொடுத்தார். அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டு டார்கெட்டை வெகுவாக குறைத்தார் ராயிடு. யாரும் எதிப்பார்க்கா வேளையில் மீண்டுமொருமுறை றன் அவுட் ஆகி ராயிடு வெளியேற இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தோனி - பிராவோ கூட்டணி அமைத்தனர். சிராஜின் 19வது ஓவரில் ரிஸ்க் ஏதும் எடுக்காமலே மூன்று அகலப்பந்துகள் மூலம் ரன்கள் கிடைக்க, ஜாலியாக போட்டியை இறுதி ஓவருக்கு எடுத்துச் சென்றார் தோனி. இறுதி ஓவரின் முதல் பந்தில் பிராவோ காட்டு சுத்து சுத்த பேட்டின் நுனியில் பட்டு நான்கு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து நான்கு பந்தில் 6 என குறைக்க சென்னை ரசிகர்களின் சத்தத்தில் பெங்களூருவே அதிர்ந்தது.
ஸ்டம்பிற்கு வெளியே யார்கர்கள் வீசி தோனியின் பலத்தை குறைக்கலாம் என திட்டமிட்டத் துவங்கியுள்ள பந்துவீச்சாளர்களுக்கு நேற்று தோனி அடித்த கடைசி சிக்ஸ் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே நகர்ந்து வந்து சுழட்டி லாங் ஆனில் அடித்த அடியில், "நான்தான் தென்னகத்தின் தென்னவன்" என சொல்லாமல் சொன்னதுப் போலிருந்தது.
என்னதான் பேட்டிங்கிற்கு சாதகமான விக்கட்டாக இருந்தாலும் சென்னை அணியின் பௌலிங் மிகவும் மோசமானதாக அமைந்தது. இதில் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமலேயே 200க்கு மேல் கொடுத்ததெல்லாம் பெரிய குற்றம்.
இன்னமும் ஹர்பஜனின் 'ரோல்' என்னவென்றுத் தீர்மானிக்காமலிருப்பதும் வருத்தமே. தாகூர் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும், ஆனால் தாகூரின் பந்துவீச்சை மோசமடைந்துக்கொண்டேதான் வருகிறது.
மிடில் ஆர்டரில் ஜடேஜா என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு ஜடேஜாவிடமே பதில் இருக்காது போல. இம்மாதிரி இருக்கும் 4-5 பிரச்சனைகளை எவ்வளவு சசீக்கிரம் சென்னை சரி செய்கிறதோ அவ்வளவு நல்லது.
பெங்களூரு நிர்வாகத்திற்கு சில கேள்விகள்:
நேற்றைய ஆட்டத்தில் ஏன் சென்னை ரசிகர்களை 'சிஎஸ்கே' வின் கொடியை எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை? ஏதேனும் அரசியல் காரணங்களா அல்லது மைதானத்தில் வெறும் பெங்களூரு அணியின் கொடி மட்டுமேத் தெரியவேண்டுமென்கிற தீர்மானமா?
இரண்டு அணிகள் மோதுவதுதால் அது போட்டி. நேற்றையப் போட்டியின்போது, மைதானத்திலிருந்து 'DJ' ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது அருவறுக்கத்தக்கது. வேண்டுமென்றே 'ஐயோ' என்று கத்துவது, சென்னை வீரர்களை நாம் 'களி' திங்கச் செய்வோமா என்று கன்னடத்தில் கூக்குரலிடுவதெல்லாம் வேண்டாத வேலை.
இவ்வளவு வன்மமும் வெறுப்பும் விளையாட்டில் எங்கே வந்தது? சென்ற ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாதில் சென்னை விளையாடியது. அங்கே ஏதும் இந்த மாதிரி நடக்கவில்லை. அரசியலைக் கலந்து விளையாட்டில் வெறுப்பைத் திணிக்க வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு விளையாடாமல் இருந்துவிடலாம்.
- பத்மநாபன் நாகராஜ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout