தோனிக்கும் தோனியின் நிழலுக்கும் நடக்கும் யுத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டிகளில் 7 வருடங்கள் தோனியுடனும் இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தலைமையின் கீழ் பல்வேறு சாதனைகளைப் புரிந்த அஸ்வின் நாளை மொஹாலி மைதானத்தில் தோனியின் அணியை எதிர்த்து விளையாடுவது ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.
மூன்றாவது ஐபில் முடிந்து வீரர்களை ஏலம் எடுத்தபோது பெங்களூரு அணியின் நிர்வாகம் அஸ்வினின் ஏலத்தொகையை பல கோடிகளுக்கு ஏற்றிவிட்டு இறுதியில் சென்னை அஸ்வினை வாங்கியபோது போனால் போகட்டும் எங்களுக்கு அஸ்வின் தேவையில்லை என்பதுபோல விஜய் மல்லையா மற்றும் நிர்வாகத்தினர் சிரித்தனர். அதே வருடத்தின் இறுதி ஆட்டம் சென்னையில் நடந்தது. முதலில் பேட் செய்து 200 ரன்கள் மேல் குவித்த சென்னை, தன்னுடைய பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே க்றிஸ் கெய்லை வெளியேற்றி அஸ்வின் பெங்களூரு நிர்வாகத்தினர் உட்கார்ந்திருக்கும் திசை நோக்கி உங்களது கதை முடிந்தது என்பது போல் செய்கை காட்டியது அட்டகாசமான வரலாறு.
இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த போதே தன்னுடைய திறமையின் மூலம் தனக்கெனத் தனியிடம் பிடித்தார் அஸ்வின். 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் அப்போதைய உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை கட்டுக்குள் வைக்க தோனி நாடியது அஸ்வினைத்த்தான். பவர் பிளே என குறிப்பிடப்படும் ஓவர்களில் ஒரு ஸ்பின் பௌலராக இருந்தபோதிலும் எப்போதும் இந்திய அணிக்கு சிறப்பாகவே செயல் பட்டு வந்தார்.
இப்போது தான் நம்மிடம் புவி, பும்ரா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். 2013ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனிக்கு மீண்டும் கைகொடுத்தது அஸ்வின் தான். 2011ல் உலகக்கோப்பை அடுத்த இரண்டு வருடங்களில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை என அட்டகாசமாக உயர்ந்துக்கொண்டிருந்த அஸ்வினின் க்ராஃப் ஒரு தின போட்டிகளிலும் ஐபிஎல் ஆட்டங்களிலும் கொஞ்சம் சரிவை நோக்கித்தான் சென்றுக்கொண்டிருந்தது. சென்ற வருடம் காயம் காரணமாக புனே அணியிலிருந்து அஸ்வின் விலக, அதன் பின்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் பெரிதாக சோபிக்காமல் போகவே, கோஹ்லி தன்னுடையத் தனித்தன்மையை நிரூபிக்கும் பொருட்டு விரலில் வித்தைக்காட்டும் அஸ்வின் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு குலதீப் சாஹல் என மணிக்கட்டை பயன்படுத்தி போடும் ஸ்பின்னர்கள் பக்கம் திரும்பியது மட்டுமல்லாமல் இவ்விருவர்களை நம்பியே அடுத்த வருட உலகக்கோப்பைக்கு இந்தியா திட்டமிடுகிறது என்று சொன்னது நிச்சயம் அஸ்வினை இன்னமும் வெறித்தனமாக உழைக்கத் தூண்டியிருக்கும்.
இந்நிலையில் தோனியை நன்கறிந்தவர் என்ற முறையிலும் மேலும் தோனியின் தலைமையில் ஏழாண்டுகள் அவரின் நிழலைப்போலவே பின்தொடர்ந்த ஒருவர் தோனிக்கு எதிராக களமிறங்குவதே பட்டாசு தான். பஞ்சாப் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் நன்றாகவே செயல்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அஸ்வினின் தலைமையும் ஒன்று. எப்படி தோனி ஸ்பின் பௌலர்களைக்கொண்டு அடுத்தடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஓவர்களை முடித்து விக்கட்டுகளை அள்ளுவாரோ அதே உத்தியை பயன்படுத்தி முஜ்பீர், அக்ஸர் படேல், மற்றும் தன்னுடைய ஆஃப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் என பட்டையைக் கிளப்புகிறார். யுவராஜ் சிங்கின் ஃபார்ம் மட்டுமே பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது பஞ்சாபிற்கு, அதை மட்டும் சரிசெய்துவிட்டால் கோப்பையை கைப்பற்றக்கூடிய அணிகளில் ஒன்றாக நிச்சயம் உருவெடுக்கும்.
சென்னைக்கு பெரிய தலைவலிகள் அப்படி ஏதும் இல்லை. முரளி விஜய் இன்னமும் ஆடவில்லை ஆனால் தயார் நிலையில் இருக்கிறார். ஹர்பஜனின் பங்கு என்னவென்று தோனி இன்னமும் தீர்மானிக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் 4 ஓவர்களை ஹர்பஜன் வீசாதது ஆச்சர்யமே. சின்னத் தல ரெய்னா காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என நிர்வாகம் தெரிவித்தது. டு ப்ளசிஸ் காயத்திலிருந்து விடுபட்டிருந்தால் கொஞ்சம் ஆறுதலாக அமையும். சாம் பில்லிங்ஸின் வருகை மிடில் ஆர்டரை ஸ்திரப்படுத்தியுள்ளது. இறுதி ஓவர்களில் ப்ராவோவை மட்டும் நம்பியிராமல் இன்னொரு பந்துவீச்சாளரும் கைகொடுத்தால் சென்னை எப்போதும் போல அசாதாரணமான அணியாக உருமாறிவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout