ஐசிசி விருதுப்பட்டியல்… ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய சிறந்த கேப்டன், வீரர்கள் யார்???

 

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன்கள் மற்றும் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது பட்டியலை அறிவித்து இருக்கிறது ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்). இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட கேப்டனாக முன்னாள் கேப்டன் டோனி தேர்வாகி இருக்கிறார். சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இந்தியாவை சேர்ந்த சில முன்னணி  வீரர்களும் சிறந்த வீரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பட்டியலையும் ஐசிசி அறிவித்து இருக்கிறது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த விருதுப் பட்டியியலில் பல முன்னணி வீரர்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளனர். இந்த வரிசையில் பெரும்பாலான நாடுகள் இடம்பெறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 அணி: சிறந்த கேப்டனாக டோனியும், தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இடம்பெற்று உள்ளனர். இவர்களைத் தவிர ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல், மகேந்திர சிங் டோனி, பொலார்ட், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை வீரர் லசித் மலிங்கா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் இருந்து ஒருவர் கூட சிறந்த டி20 அணியில் இடம்பெற வில்லை. ஆனால் இந்திய வீரர்கள் டோனி, ரோஹித் சர்மா, பும்ரா, கோலி என 4 பேர் ஒட்டுமொத்தமாக 11 பேர் கொண்ட அணியில் 6 பெரிய ஹிட்டர்ஸ் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டி: கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியே சிறந்த கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்திய அணியின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆஸி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், இலங்கை வீரர் லஷித் மலிங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி ஆகியோரும் இடம் பிடிக்கின்றனர். ஆனால் இந்த லிஸ்டில் ஒரு பாகிஸ்தான் வீரரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டி: சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியும் வீரர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே இந்திய அணியில் இருந்து தேர்வாகி உள்ளனர். டெஸ்ட் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து முன்னாள் வீரர் அலிஸ்டார் குக், டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ், விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் இடம் பிடித்து உள்ளனர். இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா கீப்பராக தேர்வாகி உள்ளார்.

இந்த வரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன் ஆகியோரும் இடம் பிடிக்கின்றனர். டெஸ்ட் அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி சார்பில் வார்னர், ஸ்மித் இருவரும் உள்ளனர். இங்கிலாந்தில் இருந்து ஸ்டோக்ஸ், ஆன்டர்ஸன், பிராட் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து தரப்பில் தலா ஒரு வீரரும் இதில் இடம் பிடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.