இதிலும் கீழ்த்தரமான அரசியலா? 10ஆம் வகுப்பு மாணவி கொலை குறித்து பிரபல நடிகர்
- IndiaGlitz, [Wednesday,May 13 2020]
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த இரண்டு கொடூரர்கள் ஒரு முன்னணி கட்சியினர் என்பதால் அந்த கட்சி இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தும் இதுகுறித்த சர்ச்சைகள் அரசியல்வாதிகளிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்?
ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு?
முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவிப் பெண் சிறுமதுரை ஜெயஶ்ரீக்கும், மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது.
இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.