ரஜினிக்கு மட்டுமல்ல.. 'ஜெயிலர்' லாபத்தை மருத்துவ துறைக்கும் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் திரையுலகில் வசூல் சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம். இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய தொகை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபமாக கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுக்கு கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் பகிர்ந்து அளித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் இன்றி மருத்துவத் துறைக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாபத்தின் சில பகுதிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 100 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாயை கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி அவர்கள் வழங்கி உள்ளார்.

அதேபோல் சென்னை அடையாறு புற்றுநோய் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவியாக 60 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை அந்த பட குழுவினர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், அதையும் தாண்டி மருத்துவத் துறைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்வது என்பது ஒரு சிறந்த ஆரம்பமாக கருதப்படுகிறது. அதேபோல் திரையுலகில் வெற்றி பெறும் பிற தயாரிப்பாளர்களும் இதனை கடைபிடித்தால் மருத்துவத்துறையும், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.