Mr Local Review
'Mr.லோக்கல்' : லோக்கல் காமெடி
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய Mr.லோக்கல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் நிறைவு செய்தார்களா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த சிவகார்த்திகேயனுக்கு, அம்மா ராதிகா, தங்கை கிரிஜாவுடன் ஒரு ஜாலியான வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியான நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு சின்ன பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, ஒரு கட்டத்தில் காதலாகி பின் மீண்டும் மோதலாகி கடைசியில் சுபத்தில் முடியும் இயக்குனர் ராஜேஷின் டிரேட்மார்க் கதை தான் இந்த படத்திலும் உள்ளது.
சிவகார்த்திகேயன் படம் முழுவதும் சிரித்த முகத்துடன் ஜாலியான கேரக்டரில் நடித்துள்ளார். அவ்வப்போது சிரிக்க வைக்கின்றார். நயன்தாராவுடன் மோதல் மற்றும் காதல் காட்சிகளில் அவருடைய வழக்கமான நடிப்பு உள்ளது. முந்தைய படங்களில் இருந்த ஆக்சன் மற்றும் நடனம் இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். அம்மாவிடம் கொஞ்சல், தங்கையிடம் செல்லச்சண்டை என ஜாலியான நடுத்தரவர்க்க குடும்ப நிகழ்வுகளை கண்முன் நிறுத்தியுள்ளார். நயனை டோராபுஜ்ஜி என்று கிண்டல் செய்து வெறுப்பேற்றும்போது தியேட்டரில் கலகல... நானும் ஹீரோ பிரண்டா இருந்து மேலே வந்தவன் தான், நீ அங்கேயே இருக்க, நான் கஷ்டப்பட்டு மேல வந்துட்டேன் என சதீஷை உண்மையிலேயே கலாய்க்கும் இடம் ஓகே. இந்த படத்தை பொருத்தவரையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய பங்களிப்பை முடிந்தவரை சரியாக செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்
அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, ஐரா என வேற லெவலில் இருக்கும் நயன்தாரா இந்த படத்தை ஏன் ஒப்புக்கொண்டார் என்றே தெரியவில்லை. அவரது நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு காட்சியை கூட இயக்குனர் ராஜேஷ் எம் வைக்கவில்லை என்பது ஏமாற்றமே. நயன்தாராவை இயக்குனர் இந்த படத்தில் ரொம்ப அழகாக காண்பித்துள்ளார். இருப்பினும் திமிர், கெத்து உடைய இந்த கேரக்டரை நயன்தாராவுக்காக இன்னும் மெருகேற்றியிருக்கலாம்
ராதிகா வழக்கம்போல் பிச்சு உதறியிருக்கின்றார். அந்த அப்பாவி வெகுளித்தனமான அம்மா கேரக்டருக்கு இவரை விட்டால் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை.
யோகிபாபு, சதீஷின் ஒன்லைன் காமெடி சிரிக்க வைத்தாலும் தியேட்டரை விட்டு வெளியே வருவதற்கு முன் காமெடி காட்சிகள் மறந்துவிடுகிறது. ரோபோ சங்கர் காமெடி என்ற பெயரில் கடுப்பேத்துகிறார். தம்பி ராமையாவுக்கும் ஒரு டம்மி கேரக்டர்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் 'டக்குன்னு டக்குன்னு' பாடல் மட்டுமே ஓகே. இந்த பாடலுக்கான வெளிநாட்டு லொகேஷன் சுப்பர். பின்னணி இசை ரொம்ப சுமார். அதிலும் ஸ்டண்ட் காட்சிகளில் சத்தம் கொஞ்சம் ஓவர்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பளிச். வெளிநாட்டு காட்சிகள் அனைத்தும் சூப்பர். எடிட்டர் விவேக் ஹர்ஷன் தன்னால் முடிந்த அளவு படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.
இயக்குனர் ராஜேஷ் எம் படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சி கூட இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. சிகரெட் காட்சி கூட இல்லை என்பது கூடுதல் ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய பழைய படங்களின் பாதிப்புகள் இல்லாமல் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கலாம். சிவா மனசுல சக்தி மற்றும் ஒருகல் ஒருகண்ணாடி' படங்களை பல காட்சிகளில் நினைவுபடுத்துகிறார். குறிப்பாக நயன்தாராவும் அவரை திருமணம் செய்யவுள்ள மாப்பிள்ளையும் சந்தித்து பேசும் காட்சி அப்படியே 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. அதிலும் அதே படத்தில் நடித்த நாராயணன் லக்கி தான் இந்த படத்திலும். ஆளையாவது மாற்றியிருக்கலாமே. ஒரே ஒரு ஒன்லைன் கதையை வைத்து கொண்டு ஜாலியான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குனர் ராஜேஷின் ஃபார்முலா முதல் மூன்று படங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆனது. மீண்டும் அதேபோல் முயற்சித்து ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். ஆன்ட்டி இந்தியன், தமிழ்நாடே சுடுகாடு ஆகிடும், போன்ற சமீபகால டிரண்டுகளை புத்திசாலித்தனமாக படத்தில் இணைத்து கைதட்டல் பெறுகிறார். சீரியல் ரசிகர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த படம் பிடிக்கலாம்.
ஆபாசம், இரட்டை அர்த்தம் இன்றி குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திற்கு ஒரு பாராட்டு
மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்பு இன்றி இரண்டு மணி நேரம் நகைச்சுவையை ரசிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்
- Read in English