பெருந்தலைவர்களை அடுத்து கட்சிக்குள் இபிஎஸ்க்கு குவியும் ஏகபோக ஆதரவு… தொண்டர்கள் குதூகலம்!!!
- IndiaGlitz, [Tuesday,September 29 2020]
நேற்று சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் முக்கியமாக அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கலந்து பேசி வருகிற அக்டோபர் 7 தேதி கூட்டாக அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்சிக்குள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏகபோக ஆதரவு ஏற்பட்டு இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு குறைந்து காணப்பட்டதாகவும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் 5 மணிநேரச் சந்திப்பாக இருந்தது என்றும் அந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டர் என்றும் தகவல் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை அவைத்தலைவர் மதுசூதனனன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அக்கூட்டத்திற்கு முன்பு ஓபிஎஸ்க்கு இருந்த ஆதரவுக் குரல்கள் தற்போது குறைந்து காணப்பட்டதைப் பார்க்க முடிந்தது எனவும் கருத்து வெளியாகி இருக்கிறது. அதில் செயலாளர்கள் திரு.அஷோகன் மற்றும் திரு. ஷெட்கான் (முன்னதாக ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தவர்கள்) தற்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. மற்றுமுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் திரு எடப்பாடி பழனிசாமி குறித்து அவர், எப்போதும் அம்மாவுக்கு (செல்வி ஜெ.ஜெயலலிதா) மிகவும் பிடித்த ஒருவராகவே இருந்தார் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் திரு.பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மட்டுமே ஓபிஎஸ்க்கு ஆதரவாகத் தனது கருத்தை வெளிப்படுத்தினார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவருக்கு கட்சியில் நற்பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இவரைக் கட்சியைவிட்டு விலக்கி வைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையைப் பொறுத்த வரை கட்சியின் அனைத்து மட்டத்திலும் ஓபிஎஸ்க்கு ஆதரவு குறைந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்து வருவதையுமே பார்க்க முடிந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்ததாகத் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுகவில் ஆதரவு அதிக அளவில் குவிந்து உள்ளன. அதனால் தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே முன்னிறுத்தப்பட வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள்கூட தற்போது முதல்வரின் நற்செயல்களைப் பார்த்துவிட்டு மீண்டும் இபிஎஸ்க்கே ஆதரவுகளை அளித்து வருகின்றனர். இதனால் கட்சிக்குள் ஓபிஎஸ்க்கு ஆதரவு பெரும்பாலும் குறைந்தே போய்விட்டது. கட்சியை வளர்ப்பதற்கு எதுவும் செய்யாமல் சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொண்டவராக அறியப்படுகிறார். இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான பதில் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என நம்பப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.