Mr.சந்திரமெளலி : திருப்பங்கள் இல்லாத சாதாரணமெளலி
கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே 'Mr.சந்திரமெளலி' படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பமாகிவிட்டது. அதிலும் கார்த்திக் படத்தின் சூப்பர் ஹிட் வசனமே டைட்டில் என்றவுடன் அந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
இரண்டு கார்ப்பரேட் கால் டாக்சி நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் அப்பாவி பயணிகள் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொலை செய்யப்படும் நபர்களில் ஒருவர் Mr.சந்திரமெளலி என்ற கார்த்திக். தனது தந்தையின் கொலைக்கு இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை கண்டுபிடித்து கவுதம் கார்த்திக் பழிவாங்குகிறார். அந்த நிறுவனம் எது? அந்த நிறுவனத்தை எப்படி கவுதம் கண்டுபிடித்தார்? என்பதே இந்த படத்தின் கதை
இரண்டு அடல்ட் காமெடி படங்களில் அடுத்தடுத்து நடித்தாலும் கவுதம் கார்த்திக் வர வர் மெருகேறி கொண்டே வருகிறார். தோற்றம் மட்டுமின்றி அவரது நடிப்பும் மெருகேறுகிறது. குத்துச்சண்டை வீரனாகவும், ரெஜினாவின் காதலராகவும், தந்தையிடம் பாசமுள்ள மகனாகவும், இறுதியில் தந்தையை கொலை செய்த கயவனை கண்டுபிடிக்கும் ஆக்சன் ஹீரோவாகவும் மாறுவதில் அவரது நடிப்பு குறை சொல்ல முடியாத வகையில் உள்ளது.
நாயகி ரெஜினா உச்சகட்ட கவர்ச்சியில் ஒரு பாடலில் நடித்திருந்தாலும், அவரது நடிப்புக்கு தீனிபோடும் ஒருசில காட்சிகள் இந்த படத்தில் உள்ளது. குறிப்பாக தந்தையை இழந்து நொறுங்கி போயுள்ள கவுதமுக்கு அவர் கொடுக்கும் ஆதரவும், அறிவுரையும் சூப்பர். இந்த படத்தில் ரெஜினா தனது சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளாராம்
கார்த்திக்கின் மிகப்பெரிய பலவீனம் அவரது வசனம் பேசும் முறை. இதை மாற்றாத வரையில் அவரை திரையில் ரசிப்பது கடினம்தான். இருப்பினும் ஒருசில காட்சிகளில் மகனிடம் காட்டும் பாசத்தில் பழைய கார்த்திக்கை பார்க்க முடிகிறது. மேலும் அந்த பத்மினி காரின் மேல் அவர் வைத்திருக்கும் பாசக்காட்சிகள் அரதப்பழசு.
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இரண்டு கால்டாக்சி நிறுவனங்களின் உரிமையாளர்களாக நடித்துள்ளனர். ஒருசின்ன சாதாரண கேரக்டருக்கு இயக்குனர் மகேந்திரன் போன்ற லெஜண்ட் தேவையா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. சந்தோஷ் பிரதாப் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பது ஒரு ஆறுதல்
சதீஷ் இந்த படத்தில் காமெடி செய்தாரா? என்பதை அவரே தனது மனசாட்சியை தொட்டு பார்த்து கொள்வது நல்லது. மேலும் இயக்குனர் அகத்தியன், மிமிகோபி, ஆகியோர்களின் நடிப்பும் ஓகே
நடிகை வரலட்சுமியின் நடிப்பு ஓகே என்றாலும் அவரது கேரக்டரை எந்த அளவுக்கு ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் தியேட்டரைவிட்டு வெளியே வந்தவுடன் மறந்துவிடுகிறது. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், சுரேஷின் படத்தொகுப்பும் ஓகே ரகம்.
இயக்குனர் திரு'வின் முந்தைய படங்களில் ஒரு சஸ்பென்ஸ் கடைசி வரை காப்பாற்றப்பட்டு வந்து அந்த சஸ்பென்ஸ் உடையும்போது ஒரு ஆச்சரியம் தரும். அந்த வகையில் இந்த படத்திலும் ஒரு ஆச்சரியம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அந்த அந்த சஸ்பென்ஸ் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஒரு கார்ப்பரேட் முதலாளி தனது போட்டி நிறுவனத்தை அழிக்க இப்படி ஒரு முட்டாள்தனமான யோசனையை செய்ய மாட்டார் என்பதே திரைக்கதையின் மிகப்பெரிய ஓட்டை. மேலும் முதல் பாதியில் படத்தின் மெயின் கதையின் காட்சிகள் ஒருசில நிமிடங்கள் மட்டுமே வருகிறது. மீதிக்காட்சிகள் கார்த்திக்-கவுதம் கார்த்திக்கின் தந்தை-மகன் காட்சிகள்தான். இந்த காட்சிகளும் சாதாரணமாகவும் ரிப்பீட் ஆவது போன்றும் இருப்பதால் ரசிகர்களை கவர வாய்ப்பில்லை. அதேபோல் வரலட்சுமி கதாபாத்திரம் இந்த படத்திற்கு தேவையா? அப்படியே இருந்தாலும் கார்த்திக்-வரலட்சுமி உறவு அப்பா-மகளா? நட்பா? அது என்ன உறவு என்பது இயக்குனருக்கு மட்டுமாவது புரிந்ததா? என்பது தெரியவில்லை.
அதேபோல் இரண்டு அடிக்கு மட்டுமே கண்பார்வை தெரியும் கவுதம் வில்லனை துரத்துவது, பட்டனில் கேமிரா வைத்து அதனை புளூடூத் மூலம் நடப்பதை அறிவுறுத்துவது ஆகியவை செயற்கையாக உள்ளது. இயக்குனர் திருவின் ஒரே பிளஸ், கடைசி வரை தொடர் கொலைகளை செய்தவர் யார்? என்ற சஸ்பென்ஸை காப்பாற்றி வந்தது மட்டுமே
மொத்தத்தில் மிஸ்டர் சந்திரமெளலி ஒருசில திருப்புமுனை காட்சிகளை மட்டுமே கொண்ட ஒரு சாதாரணமெளலிதான்.
Comments