மணிரத்னம் உருவாக்கிய 'மிஸ்டர் சந்திரமெளலி' கேரக்டர்.. பழம்பெரும் நடிகர் மறைவு..!
- IndiaGlitz, [Thursday,December 14 2023]
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’மௌனராகம்’ திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலி என்ற கேரக்டரில் நடித்த பழம்பெரும் நடிகர் ரா. சங்கரன் இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக், மோகன், ரேவதி நடித்த ’மௌனராகம்’ திரைப்படத்தில் ரேவதி தந்தை கேரக்டரில் நடித்தவர் ரா. சங்கரன். பழம்பெரும் நடிகரான இவர் கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் தெலுங்கு உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்த இவர் பழம்பெரும் நடிகர் ஜாவர் சீதாராமனின் உறவினர் ஆவார்.
கடந்த 1974 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக பாரதிராஜாவின் ’புதுமைப்பெண்’ ’ஒரு கைதியின் டைரி’ மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ பகல் நிலவு’ ’மௌன ராகம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கமல்ஹாசன், சிவக்குமார் இணைந்து நடித்த ’தேன் சிந்துதே வானம்’ உள்பட ஒரு சில படங்களை இவர் இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இன்று நடிகர் ரா சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. ரா சங்கரன் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.