தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் பட நடிகை… ஜாமீன் கிடைக்காமல் சோகம்!

  • IndiaGlitz, [Wednesday,May 04 2022]

நடிகர் கருணாஸ் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “அம்பாசமுத்திரம் அம்பானி“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே அறியப்பட்ட நடிகை நவ்னீத் கவுர். இவர் தற்போது தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நடிகை நவ்னீத் கவுர் தமிழில் “அரசாங்கம்“, “அம்பாசமுத்திரம் அம்பானி“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்பு மராட்டிய மாநில தேர்தலில் கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேட்சையாக வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏ ரவி ராணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அரசியலில் குதித்த இவர் தற்போது சுயேட்சை எம்.பியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில மக்களின் துயரைப் போக்குவதற்காக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீட்டிற்கு முன்பு மார்ச் 23 ஆம் தேதி அனுமன் மந்திரம் வாசிக்கப்போவதாக நவ்னீத் கவுர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மும்பை காவல் துறை நவ்னீத் கவுரையும் அவரது கணவர் ரவி ராணாவையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இதையடுத்து நடிகை நவ்னீத் கவுர் தனது வழக்கறிஞர் மூலமாக சிறைத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் தனக்கு 11 நாட்களாக ஜாமீன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் சிறையில் முதல் வகுப்பு கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே ஸ்போண்டி லோவிஸ் எனும் நோய் பாதிப்பு இருப்பதால் தன்னால் தரையில் படுத்து உறங்க முடியவில்லை. அதிகமாக வலி எடுக்கிறது என்றும் சிறைத்துறைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும் நடிகை நவ்னீத் கவுர் மற்றும் ரவி ராணாவிற்கு சொந்தமாக மும்பையில் கட்டப்பட்டு இருக்கும் வீட்டில் நகராட்சி விதிகள் மீறப்பட்டு உள்ளதாக மும்பை நகராட்சித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் விதிகளை மீறி வீடு கட்டப்பட்டு இருந்தால் உடனடியாக இடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் ஒருவரின் வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் அனுப்புவது கண்டிக்கத்தக்கது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற விமர்சனங்கள் பல தரப்புகளில் இருந்து வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.