கொரோனாவை காரணம் காட்டி மனைவியை விட்டு பிரிந்த நபர்… வைரல் சம்பவம்!

கொரோனா நேரத்தில், கொரோனா அறிகுறி இருக்கிறது, கோவிட் பாசிட்டிவ் எனப் பலரும் பொய்களை அள்ளிவிட்டு வேலையில் இருந்து தப்பிக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்து செல்ல நினைத்த கணவன் ஒருவர் தனக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாகப் பொய் சொல்லி போலி சான்றிதழையும் தயாரித்து இருக்கிறார். இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என நினைத்த அந்த இளைஞர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகக் கூறி போலி கொரோனா சான்றிதழை ஆன்லைன் மூலமாக தயாரித்து இருக்கிறார்.

இந்த சான்றிதழை தனது மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய அந்த இளைஞர் ஊரைவிட்டு ஓடியும் இருக்கிறார். இதனால் பதறிப்போன அவரது மனைவி அந்தத் தனியார் கொரோனா பரிசோதனை நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது அது போலி சான்றிதழ் எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் தனியார் பரிசோதனை மையத்தின் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த அந்த இளைஞர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.