பால் கறக்கல… எருமைமாட்டின் மீது போலீசில் புகார் அளித்த விவசாயி!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

எருமை மாடு சரியாகப் பால் கறக்கவில்லை என்று கூறி கையோடு தன்னுடைய எருமைமாட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விவசாயி ஒருவர் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த நயோகான் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் பாபுலால் ஜாதவ் (45). விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இவருடைய எருமை மாடு கடந்த சில தினங்களாக சரியாக பால் கறக்காமல் இருந்திருக்கிறது. இதனால் கோபம் அடைந்த பாபுலால் தன்னுடைய எருமை மாட்டின் மீது குற்றம்சாட்டி எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் யாரோ சூனியம் வைத்ததால்தான் தன்னுடைய எருமைமாடு பால் கறக்காமல் இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். இந்த விசித்திர வழக்கைப் பார்த்து திகைத்துப்போன போலீசார் அலட்சியம் காட்டாமல், எருமை மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கலாம். எனவே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த பாபுலால் தற்போது தன்னுடைய எருமை மாடு நன்றாக பால் கறக்கிறது என்றும் தனக்கு ஆலோசனை கூறியதற்கு நன்றி என்றும் காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.