தமிழகத்தில் திரைத்துறை பணிகள் ரத்து: ஆர்கே செல்வமணி பேட்டி
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், நேற்றும் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரடங்கு ஒருபக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் மே 31-ஆம் தேதி வரை திரைத்துறை பணிகள் ரத்து என்று கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை அனைத்து திரைப்படங்களும் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர் நடிகைகள் உதவ முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதும், ஆர்கே செல்வமணி இதே போன்ற ஒரு வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார் என்பதும் இதனை அடுத்து பல முன்னணி நடிகர்கள் லட்சக்கணக்கில் பெப்ஸி தொழிலாளர்களுக்கான நிதி உதவி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.