நாளை முதல் திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டணம்
- IndiaGlitz, [Thursday,July 06 2017]
'ஒரே நாடு ஒரே வரி' என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான் என்பதும் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்பதுதான் தலைவிதியாக உள்ளது என்பதும் தான் இன்றைய நிலையாக உள்ளது. திரைப்படத்துறையின் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனைக்கும் வேலைநிறுத்தம் செய்யாத திரையரங்கு உரிமையாளர்கள் இந்த இரட்டை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர்.
கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்பது தான் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளாக இருந்தது என்று தான் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் வரியையும் ஏற்றுக்கொள்ளவும் அதற்கு பதில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
எனவே நாளை முதல் ஜிஎஸ்டியுடன் சினிமா டிக்கெட் விலை ரூ153.60 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.120 மட்டுமே கட்டணமாக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிக கட்டண பார்க்கிங், பலமடங்கு ஸ்னாக்ஸ்களின் விலை என்று பார்வையாளர்கள் செலவு செய்ய வேண்டிய நிலையில் தற்போது கூடுதல் வரிச்சுமையும் பொதுமக்கள் தலை மீது திணிக்கப்பட்டுள்ளது என்பதே சோகமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்றத்தானா இந்த நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் என்பதே ஒவ்வொரு சாமானியனின் கேள்வியாக உள்ளது.