இந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்!!!

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

 

இந்தோனசியாவில் 100 க்கும் மேற்பட்ட ஆபத்தான எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சினா பங் பகுதியில் காணப்படுகின்ற 400 ஆண்டுகள் பழமையான மலையில் இயங்கிக் கொண்டிருந்த எரிமலை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக விரைவில் வெடித்து சிதறும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவில் குடியிருந்த 30 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சினா பங் பகுதியிலுள்ள எரிமலை வெடித்து சிதறியதாகவும் அதனால் 16 ஆயிரத்து 400 அடி உயரத்திற்கு துகள் சிதறடிக்கப்பட்டதாகவும் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தத் துகள்கள் 20 கிலோ மீட்டர் பரப்பளவு வரையிலும் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு கடந்த 2010 இல் இந்த எரிமலை நெருப்பை உமிழ்ந்ததால் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அடுத்து 2014 ஆம் ஆண்டு எரிமலையில் ஏற்பட்ட கசிவினால் 16 பேர் உயிரிழந்ததாகவும் 2016 இல் எரிமலை குழம்பு வெளியாகி 7 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.