ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா'! திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Thursday,March 09 2017]
ராகவா லாரன்ஸ் நடித்து தயாரித்து இயக்கிய 'காஞ்சனா 2' திரைப்படம் தமிழ் சினிமாவுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.120 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது. இதனால் அவருடைய அடுத்த படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பட்டாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நிக்கி கல்ராணி முதல்முறையாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, சதீஷ், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் கதை 2 போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை காக்க வேண்டிய போலீஸே இரண்டு பிரிவாக பிரிந்து அவர்களுக்குள் அடித்து கொண்டிருக்கும் நிலையில் சமூக விரோதி ஒருவர் இதை பயன்படுத்தி லாபம் பார்க்க நினைக்கின்றார். அந்த சமூக விரோதியின் எண்ணம் ஈடேறியதா? என்பதை விறுவிறுப்பாக சொல்லும் திரைக்கதை தான் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முதல்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். இன்னொரு போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தை தயாரிக்கும் போதும், தயாரித்து முடித்து வெளியாகும்போதும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை படக்குழுவினர்களுக்கு ஏற்பட்டது. திரையுலகில் அபூர்வமாக மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் ஒருசில நடிகர்களில் ஒருவராக லாரன்ஸ் இந்த படத்தின் ஹீரோ என்பதால்தான் இந்த படத்தின் பல பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பிரபல தயாரிப்பாளர் டி.சிவா கூறியதை பார்ப்போம். அவர் கூறியதாவது:
'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் தற்போது ரிலீஸ் வரை வந்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ராகவா லாரன்ஸ் தான். உலகத்தில் மிகச்சிறந்த மனிதரான லாரன்ஸ் உடன் 2 வருடங்கள் பழக வாய்ப்பு இந்த படத்தால் எனக்கு கிடைத்தது. தனக்கு வரும் பணம் அனைத்துமே, யாருக்காவது உதவி செய்யத்தான் கடவுள் கொடுக்கிறார் என அவர் நினைக்கிறார். இப்படம் வெளியாக நிறைய பேர் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் லாரன்ஸ் தான்.
இப்படப் பிரச்சினைகளைப் பேச ஆரம்பித்தவுடன், என்ன பிரச்சினை எனக் கேட்டார். அனைத்தையும் கேட்டுவிட்டு, நான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்றார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 'என் படம் வெளியாக வேண்டும் அவ்வளவுதான்' என்றார். மறுபடியும் கணக்குப் பார்த்து வரும் போது, ஒரு தொகை வித்தியாசம் வந்தது. அந்த தொகையையும் நானே கொடுத்துவிடுகிறேன் என்று கூறி மீண்டும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
படத்தின் நாயகனே இவ்வளவு தூரத்துக்கு இறங்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தான் பைனான்சியர்களிலிருந்து பலரும் இறங்கி வந்தார்கள். அவர் மட்டும் இறங்கி வரவில்லை என்றால் இப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகியிருக்கலாம்." என்று கூறினர். எனவே இன்று இப்படம் வெளியாகிறது என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ராகவா லாரன்ஸ் அவர்களின் உதவி செய்யும் மனப்பான்மைதான் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஏழு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். ஏற்கனவே அனைத்து பாடல்களும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக 'இவன் காக்கி சட்டை' என்ற வைரமுத்து எழுதிய பாடலும், இயக்குனர் சாய்ரமணி எழுதிய 'மொட்ட பைய பைய பையன்' என்று தொடங்கும் பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்த படம் வெளியாகும் கடைசி நேரத்தில் கூட நீதிமன்றத்தில் ஒரு வழக்கை சந்தித்து, அதையும் தகர்த்து நாளை வெளியாகவுள்ளது. ராகவா லாரன்ஸின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் அவருடைய வெற்றி படங்களில் ஒன்றாக இணையுமா? என்பதை நாளை இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.