நடிகராக மாறும் பிரபல காமெடி நடிகரின் சகோதரர்
- IndiaGlitz, [Monday,July 11 2016]
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற ஒரே படத்தின் வெற்றியால் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்குவதன் மூலம் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். மூன்று வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ள நிலையில் ஸ்ரேயா ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முதல்முறையாக சிம்புவுடன் மொட்டை ராஜேந்திரன் காமெடி வேடத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யுடன் 'தெறி' மற்றும் அஜித்துடன் 'வேதாளம்' ஆகிய படங்களில் தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்ற ராஜேந்திரன் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனின் சகோதரர் மாரி மணி என்பவரும் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.