பெற்ற தாயே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கொடூரம்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

பிறக்க போவது பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே கொலை செய்வது, பிறந்த பின்னர் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது போன்ற கொடிய சம்பவங்கள் அவ்வப்போது தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் இரட்டை பெண் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

நாகர்கோவில் அருகே காற்றாடித்தட்டு என்ற பகுதியை சேர்ந்த கண்ணன்-திவ்யா தம்பதியினர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் இருந்த திவ்யா திடீரென இரண்டு குழந்தைகளும் பால் குடிக்கும்போது ஒன்றன்பின் ஒன்றாக இறந்ததாக திவ்யா கூறினார். பின்னர் இரு குழந்தைகளையும் கண்ணன் வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துவிட்டனர்.

இந்நிலையில் குழந்தைகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியில் உள்ள சிலர் காவல்துறையினர்களிடம் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் குழந்தைகள் புதைத்த இடத்தில் தோண்டி பிரேத பரிசோதனை செய்ததில் இரண்டு குழந்தைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தைகளின் தாயார் திவ்யா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.