கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக தாயாரின் சடலம் காத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் பகுதியில் வசித்து வந்தவர் அனுசுயா சந்திரமோகன். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து இவருடைய மகளும், இங்கிலாந்து அரசு மருத்துவமனை நர்ஸ் பணி செய்பவருமான ஜெனிபர் என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தாய், மகள் இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அனுசுயா சந்திரமோகன் சிகிச்சையின் பலன் இன்றி திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது மகள் ஜெனிபர் வரும் வரை அவரது சடலத்தை பாதுகாக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து சவ பராமரிப்பு மையத்தில் அவருடைய உடலை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஜெனிஃபர் குணமடைந்து வீடு திரும்பி வரும்வரை எவ்வளவு செலவானாலும் அனுசுயாவின் உடலை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்றும் அனுசுயாவின் உடலை அவரது மகள் ஜெனிபர் வந்துதான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.