கொரோனா ஊரடங்கால் 15 வருடங்கள் கழித்து இணைந்த தாயும் மகனும்!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் மகனும் கொரோனா ஊரடங்கால் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் லட்சுமி என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கணவர் இறந்ததால் இரண்டு மகள்கள் மற்றும் ஐந்து மகன்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருந்தது. தனது சத்துணவு பணியினால் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை காப்பாற்றி வந்தார் மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு சில குழந்தைகளை வேலைக்கும் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் பாண்டியராஜன் என்ற மூன்றாவது மகன் சினிமா ஆசையால் திடீரென தாயிடம் சொல்லாமல் சென்னைக்கு சென்றுவிட்டார். மகனை எங்கும் தேடி கிடைக்காததால், சாத்தூர் காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளதால் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த பாண்டியராஜன் பழைய பேப்பர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஊரடங்கால் தங்க இடம் இல்லாததாலும் சாப்பிட வழி இல்லாததாலும் தனது தாயை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து நடந்தே ஊருக்கு சென்றார்.
சில தூரம் நடந்தும், சில தூரம் லாரிகளிலும் பயணம் செய்த பாண்டியராஜன், நேற்று இரவு சாத்தூருக்கு வந்தார். 15 ஆண்டுகளுக்கு பின் மகனைப் பார்த்த தாய் லட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்து அவரை வரவேற்றுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானதை அடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
15 வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் தாயும் மகனும் இணைந்துள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.