இந்தியாவில் 6-8 வாரங்களுக்கு பொதுமுடக்கம்? ஐசிஎம்ஆர் சொல்ல வருவது என்ன?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கொரோனா நோய்ப்பாதிப்பு 10% க்கும் அதிகம் உள்ள மாவட்டங்களில் குறைந்தது 6-8 வாரங்களுக்கு பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுக்கவே தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர், மருத்துவமனைகளில் படுக்கை போன்றவை பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் தினம்தோறும் புதிய பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை தாண்டுகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் பொருளாதாரத் தாக்கத்தின் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இதனால் ஊரடங்கு குறித்த முடிவுகள் அனைத்தும் தற்போது மாநில அரசுகளின் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுக்க 10% க்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு பொது ஊரடங்கை அறிவிக்க வேண்டும். மேலும் 10% இல் இருந்து 5% ஆக குறையும் வரை இந்த பொது ஊரடங்கை தளர்த்தக் கூடாது என்றும் டாக்டர் பல்ராம் பார்கவா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து இந்தியாவில் 718 நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த 718 நகரங்களில் 4 இல் 3 மடங்கு நகரங்கள் தற்போது 10%க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை கொண்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல் வெளியிட்டு இருக்கிறது. எனவே 10% க்கும் அதிகம் கொரோனா பாதிப்பை வைத்து இருக்கும் 533 நகரங்களுக்கு முழு பொது ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த நகரங்களில் 10-5% ஆக குறையும் வரை ஊரடங்கை தளர்த்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த பட்டியலில் தலைநகர் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.