சாதனை செய்த தங்கமங்கையின் சாதியை தேடிய நெட்டிசன்கள்
- IndiaGlitz, [Monday,July 16 2018]
பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே. இந்த பதக்கத்தினால் உலக அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் பெற்றார்.
இந்தியாவுக்காக மிகப்பெரிய சாதனை செய்த ஹிமாதாஸ் ஒருபக்கம் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஹிமாதாஸ் என்ன ஜாதி என்பதை கூகுளில் நெட்டிசன்கள் அதிகளவில் தேடியுள்ளனர். ஜாதிக்கு பின்னர்தான் அவருடைய பழைய சாதனைகள், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் உள்பட மற்ற விபரங்களை தேடியுள்ளனர்.
இதற்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவையும் இதேபோல் ஜாதியை தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கத்தை வென்றதும் தேசிய கொடியை ஏந்தி பிடித்தவரும், தேசியகீதம் ஒலிக்கும்போது தன்னையும் அறியாமல் கண்ணீர்விட்ட ஒரு வீராங்கனையின் சாதனையை விட சாதி முக்கியமா? நெட்டிசன்கள் எண்ணிப்பார்ப்பார்களா?