கொரோனாவால் அனாதையான குழந்தைகள்? அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு!
- IndiaGlitz, [Thursday,July 22 2021]
கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தை அல்லது தங்களது பாதுகாவலர்களை இழந்து உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர் என்றும் அமெரிக்க அறிவியல் ஆய்விதழான தி லான்செட் (The Lancet) பகீர் தகவலை வெளியிட்டு உள்ளது.
கொரோனா எனும் கொடுந்துயரில் மாட்டிக்கொண்டு உலக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு, வறுமை, மருத்துவப் பற்றாக்குறை எனப்பல நெருக்கடிக்கு மத்தியில் சிறுவயது குழந்தைகள் பராமரிப்பு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தாய், தந்தை, பாதுகாவலர்களை கொரோனாவிற்கு பலிக்கொடுத்து விட்டு தற்போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதைகளாக மாறி இருக்கின்றனர்.
அதுவும் கொரோனா பரவத் துவங்கிய முதல் 14 வாரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை இழந்து விட்டதாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தாத்தா, பாட்டியை இழந்து தற்போது பராமரிப்பின்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் மட்டும் 43,139 குழந்தைகள் தங்களது தாய், தந்தையை இழந்து அனாதையாகி இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த அளவு அதற்கு முந்தைய மார்ச் மாதத்தைவிட 8.5% அதிகம் எனவும் புள்ளிவிரவம் தெரிவித்து இருக்கிறது.
இதனால் உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள் அனாதையாகி இருக்கின்றனர் என்றும் இவர்களை பாராமரிப்பதற்கு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூகநல ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். மேலும் தென்ஆப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மெக்சிகோ போன்ற நாடுகளில்தான் குழந்தைகள் அனாதையாகி இருப்பது அதிகரித்து இருக்கிறது என்றும் லான்செட் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த உயிரிழப்புகளில் பெண்களின் விகிதத்தை விட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பெண்களை விட 5% ஆண்கள் அதிகமாக இறந்து அவர்களின் குழந்தைகளை அனாதையாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.