இந்தியாவில் 78ஆயிரமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 4000 பேர்!
- IndiaGlitz, [Thursday,May 14 2020]
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து கொண்டே உள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 74,281 பேர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் ஒரே நாளில் 3722 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,386லிருந்து 26,235ஆக உயர்ந்துள்ளது என்பதால் கடந்த 24 மணி நேரத்தில் 1849 பே கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று வரை 2,415ஆக இருந்த நிலையில் இன்று 2,549ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது. மகாராஷ்டிராவில் 25,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,547ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவுக்கு இம்மாநிலத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 975ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவை அடுத்து குஜராத்தில் 9268 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 9227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. டெல்லியில் 7998 பேர்களும், ராஜஸ்தானில் 4328 பேர்களும், உத்தரபிரதேசத்தில் 3729 பேர்களும், மேற்குவங்கத்தில் 2290 பேர்களும், ஆந்திராவில் 2137 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.