6000 கால்நடைகள், 40 பணியாளர்களுடன் நடுக்கடலில் மாயமான சரக்கு கப்பல்!!! பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
கிழக்கு சீனக் கடல்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மாயமானதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தக் கப்பலில் 5,867 இளம் பசுக்கள் மற்றும் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் என 43 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சூறாவளியால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து இதுவரை 1 நபர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். மேலும் மாயமான சரக்குக் கப்பலில் இருந்த பசுக்கள் மற்றும் 42 பேரைக் குறித்த எந்தத் தடயமும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஜப்பான் நாட்டு கடலோர காவல் படை குறிப்பிட்டு இருக்கிறது.
நியூசிலாந்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி புறப்பட்ட சரக்குக் கப்பலில் 5,867 பசுக்கள் மற்றும் 43 பேர் இருந்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்தக் கப்பல் கிழக்குச் சீனாவில் உள்ள டாஸ்கான் துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது என்றும் இந்தப் பயணத்தை முடிக்க 14 நாட்கள் பிடிக்கும் எனவும் நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று சீனக்கடல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்ததாக ஜப்பான் கடலோர காவல்படை தகவல் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் கப்பலில் இருந்த 43 பேரில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 43 பேரில் ஒருவர் மட்டும் நேற்று ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் தெரிவித்த தகவலின்படி சூறாவளி காற்று கப்பலைத் தாக்குவதற்கு முன்பே சரக்கு கப்பலின் ஒரு இயந்திரம் பழுதாகி இருந்தது. அதையடுத்து மேலும் சூறாவளிக் காற்றின் அலையால் கப்பல் நிலை குலைந்ததாகவும் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சூறாவளி காற்றால் கப்பல் கவிழ்வதைப் பார்த்த அவர் உடனே கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த விபத்தில் தன்னைத் தவிர அவர் வேறுயாரையும் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று விபத்தான சரக்கு கப்பலில் இருந்து தென் மேற்கு ஜப்பானில் உள்ள அமாமி ஒஷிமா என்ற தீவிற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உதவிக் கேட்கப் பட்டதாகவும் ஜப்பான் கடலோர காவல்படை தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சரக்குக் கப்பலில் மாயமான 5,867 பசுக்கள் மற்றும் 42 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஜப்பான் கடலோரக் காவல் படை குறிப்பிட்டு இருக்கிறது.