தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள்!!!
- IndiaGlitz, [Friday,April 10 2020]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். பாதிப்பு அதிகமானதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதியவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் காணப்பட்டதால் அவருக்கு கொரோனோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனே முதியவர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
72 வயது முதியவருடன் சிகிச்சையின்போது தொடர்புடைய எய்ம்ஸ் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 30 க்கும் அதிகமானோர் தொடர்பு கொண்டிருந்தனர். எனவே அவர்களை தங்களது வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது. தற்போது மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களைத் தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றுடன் நேரடியாக தொடர்புடைய மருத்துவர்களும் தற்போது அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக இத்தாலியில் 70 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளித்து நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்த செய்தி உலகையே உலுக்கியது. தமிழகத்திலும் 6 மருத்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில் இதுபோன்று சிகிச்சைக்காக வருபவர்களால் மருத்துவர்களும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைமை வருதத்திற்குரியது.