ஆன்மீக அரசியல் செய்த ஆர்ஜே பாலாஜி!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளிவந்துள்ள் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் சிறப்பான புரமோஷன் காரணமாக படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
ஓடிப்போன அப்பா, மூன்று தங்கைகள், சின்னக்குழந்தை போல் பொறுப்பில்லாமல் இருக்கும் அம்மா என ஒரு குடும்பத்தையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் ஆர்ஜே பாலாஜி, லோக்கல் சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை செய்து வருகிறார். அப்போது நாகர்கோவில் பகுதியில் இருக்கும் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபரிக்க திட்டமிட்டு ஆசிரமம் அமைக்க முயற்சிக்கின்றார் பகவதி பாபா என்ற ஒரு சாமியார். இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி கண்முன் தோன்றும் மூக்குத்தி அம்மன், அவருடைய வீட்டின் பிரச்சனையையும், பாபா பிரச்சனையையும் எப்படி முடிக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை!
அப்பாவி இளைஞன், அதே நேரத்தில் பாபாவிடம் கேள்வி கேட்கும் புத்திசாலித்தனம் என இரண்டும் கலந்த ஒரு கேரக்டர் ஆர்ஜே பாலாஜிக்கு. முதல் பாதியில் அவர் செய்யும் காமெடி பெரும்பாலான இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அம்மனை சந்தித்த பின்னரும் அவருடைய கேரக்டர் சீரியஸாக மாறாமல் அதே காமெடி தொடர்கிறது. வசனம் பேசுவதையும் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்வது போலவே செய்கிறார். ஒரு அளவுக்கு மேல் சலித்து போகிறது
அம்மன் கேரக்டரில் இதுவரை கே.ஆர்.விஜயா முதல் கஸ்தூரி வரை எத்தனையோ நடிகைகள் அம்மன் வேஷம் போட்டுவிட்டார்கள். அந்த வரிசையில் முதல்முறையாக நயன்தாராவும் அம்மன் கேரக்டர் செய்துள்ளார். அம்மன் வேடம் கச்சிதம் மட்டுமின்றி அவருடைய பாடிலேங்வேஜூம் அற்புதம். அம்மன் கேரக்டர் என்றால் ஆவேசமாக வேப்பிலையை கையில் வைத்து ஆவேசமாக ஆடவேண்டும் என்ற ஃபார்முலாவில் மாட்டாமல் இயல்பாக நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் கடவுள் போல் பேசாமல் ஒரு சக மனிதன் போல் பேசி மனதை கவர்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நடிப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் நடிப்பதற்கு பெரும் பஞ்சம் இருந்த நிலையில் அந்த பஞ்சத்தை போக்கியுள்ளார் ஊர்வசி. ஏற்கனவே ‘சூரரை போற்று’ படத்தில் பட்டைய கிளப்பிய ஊர்வசி, இந்த படத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். திருப்பதிக்கு ஒருமுறையாவது போக வேண்டும் என்ற தவிப்பு, மூக்குத்தி அம்மனை பார்த்தது அவரை நம்பாமல் அவர் பேசும் வசனம், கிளைமாக்ஸில் ஓடிப்போன கணவனிடம், ‘நீ இல்லாமலேயே எங்களால் வாழ முடியும்’ என்று முகத்தில் அறைந்தால் போல் கூறிவிட்டு கூலிங் கிளாஸ் நடக்கும் ஸ்டைல்’ என அசத்தியுள்ளார். தமிழ் சினிமா இன்னும் இவரை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
மெளலி, பாபாவாக நடித்த அஜய்ஜோஷ், உள்பட ஒருசில சப்போர்ட்டிங் கேரக்டர்கள் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளார்கள்.
கிரிஷ் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் கேட்க மட்டுமின்றி படத்தில் பார்க்கவும் அருமையாக உள்ளது. பின்னணி இசையில் எந்த குறையும் இல்லை. தினேஷ் கிருஷ்ணன் கேமிரா மற்றும் செல்வா படத்தொகுப்பு கச்சிதம். டீசர், டிரைலரில் வந்த மனோபாலா காட்சிகளையும் சேர்த்து எடிட் செய்துவிட்டதில் ஏதாவது உள்குத்து உண்டா?
‘கடவுள் இல்லைன்னு சொல்றவனை கூட நம்பலாம், ஆனால் ஒரு கடவுளை உசத்தி இன்னொரு கடவுளை திட்றான் பாரு அவன் ரொம்ப டேஞ்சர்
இங்க பக்தியால கடவுள் ஃபேமஸ் ஆவறதை விட பிரசாதத்தால ஃபேமஸ் ஆகற கடவுள் தான் அதிகம்
கடவுள் கிட்ட பேச இடையில யாரும் புரோக்கர் தேவையில்லை, நாம எல்லாரும் கடவுள் கூட பேசலாம்
கடவுள் மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னா அவரு நேரிடையாவே பண்ணிருவாரு. எதுக்கு உன்னை மாதிரி சாமியாரு மூலமா பண்ணனும்?
யாராவது தப்பை எதிர்த்து கேள்வி கேட்டா உடனே உன் பின்னாடி அந்த மதம் இருக்கு, இந்த மதம் இருக்கு, வெளிநாட்ல இருந்து காசு வருதுன்னு சொல்லி அவங்கள ஆஃப் செஞ்சிற வேண்டியது
குடும்பத்தை விட்டுட்டு வான்னு சொல்ற சாமியார்கிட்ட யாராவது நி ஏன் குடும்பத்தை விட்டு வரல்லைன்னு கேட்ருக்கிங்களா?
சாமியார் ஏன் சாம்பார் பொடி விற்கணும், எலக்சன்ல நிக்கணும்?
போன்ற வசனங்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ற சாட்டையடி. அதற்காக இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துக்கள்.
ஆனால் 11ஆயிரம் ஏக்கர் அபகரிக்கும் ஒரு சாமியார், பயங்கர பின்னணி உள்ள சாமியார், பணபலம், அரசியல் பலம் உள்ள ஒரு சாமியாரை எந்த அளவுக்கு புத்திசாலித்தனமான கேரக்டராக உருவாக்கியிருக்க வேண்டும். அந்த பாபா கேரக்டரை காமெடி கேரக்டராக்கியதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். மேலும் கிளைமாக்ஸில் நயன்தாரா பேசும் வசனங்கள் அப்படியே ‘பிகே’ படத்தில் அமீர்கான் கிளைமாக்ஸில் பேசும் வசனங்களின் அப்பட்டமான காப்பி’. அதேபோல் ஆர்ஜே பாலாஜி மற்றும் பாபா இடையே நடக்கும் தொலைக்காட்சி உரையாடலின்போது ‘பிகே’ ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இருப்பினும் இன்றைய காலத்தில் பக்தி என்றால் என்ன? மக்கள் கடவுளை ஏன் கும்பிடுகிறார்கள், கடவுளை கும்பிட ஏன் இடையில் ஒரு புரோக்கர் என்ற கேள்விகளை மக்களிடம் எழுப்பி, ‘கடவுளை வெளியில் எங்கும் தேட வேண்டாம், கடவுள் உங்களுக்குள் தான் இருக்கின்றார், உங்களுக்குள் இருக்கும் கடவுள் தான் உங்களுடைய பெஸ்ட் வெர்ஷன், அதுதான் நீங்க யாருங்கிறதை தீர்மானிக்கும்’ என்பதை அழுத்தமாக பதிலும் சொல்லி முடித்த ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு சபாஷ்.
மொத்தத்தில் ஒரு வழக்கமான சாமி படமாக இல்லாமல் ‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலம் ஒரு ஆன்மீக அரசியலை நடத்தியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. ஒருமுறை குடும்பத்துடன் பார்க்கலாம்.
Comments