மான்ஸ்டர் - எலியின் விஸ்வரூபம்
ஒரு நாள் கூத்து என்கிற வித்தியாசமான அழுத்தமான கதையம்சத்துடன் கூடிய படத்தில் அறிமுகமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் எஸ் ஜெ சூர்யாவுடன் இணைந்து இந்த மான்ஸ்டரை கொடுத்திருக்கிறார். ட்ரைலரையும் பட போஸ்டர்களையும் பார்க்கும்போது கதாநாயகனுக்கும் எலிக்கும் நடக்கும் போராட்டத்தை சுவாரசியமாக சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறுகிறது. படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜெ சூர்யா) சிறு வயது முதலே எல்லா உயிரினங்கள் மேலும் பற்று கொள்பவர். ஒரு ஈ எறும்புக்கு கூட தீங்கு விளைவிக்காதவர். மின்சார வாரியத்தில் வேலை செய்யும் சூர்யாவுக்கு வயது நாற்பதை தாண்டியும் பெண் கிடைத்தபாடில்லை. கடைசியாக மேகலா என்கிற ஒரு பெண்ணை பார்க்க போக அவள் வீட்டுக்கே வராமல் போகிறாள். இருக்கும் வீட்டிலும் ஹவுஸ் ஓனர் தொல்லை பெண் வீட்டாரும் சொந்த வீடில்லை என்று குறை செல்வதாலும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சொந்த வீடு வாங்கி குடி போகிறார். வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் மேகலா undefined பிரியா பவானி ஷங்கர் அவருக்கு கால் செய்ய வாழ்க்க்கையில் எல்லாம் தமக்கு கிடைத்த மாதிரி உணர்கிறார் ஹீரோ. ஆனால் அந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு எலி ஹீரோவை பாடாய் படுத்தி அவர் உணவு உடைமைகள் மற்றும் நிம்மதி எல்லாவற்றையும் ஒரு சேர அழிக்க எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாத அவர் அதன் மேல் கொலை வெறி கொள்கிறார். இதனிடையே அதே வீட்டில் வைரங்களை பதுக்கி வைத்திருக்கும் முன்னால் உரிமையாளர் வில்லன் அந்த வீட்டுக்குள் புகை நினைக்கிறான். ஹீரோ எலியை வென்றாரா? வில்லன் என்ன செய்தான் காதல் என்னவானது போன்ற கேள்விகளுக்கு பதில் பின் பாதி படத்தில்.
எஸ் ஜெ சூர்யா மிக நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். பெண் பார்க்கும் இடங்களில் அவர்கள் இவரை தவிர்க்கும் போது நெளிவது பின் அழகிய இளம் காதலி கிடைக்கும்போது உருகுவது எலியிடம் மாட்டி கொண்டு அல்லாடி பதறுவது என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் சூர்யா. பிரியா பவானி ஷங்கர் அழகாக இருக்கிறார் அளவாக அழகாக நடித்து தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். வழக்கமான ஹீரோவுடைய நண்பன் பாத்திரம் தான் என்றாலும் கருணாகரன் மிக இயல்பான நடிப்பை வெளி படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் யாரும் மனதில் நிற்கவில்லை அந்த அடுக்கு மாடி குடியிருப்பு இம்சை தாத்தாவை தவிர.
மான்ஸ்டர் படத்தின் மிக பெரிய பலம் எலியும் அந்த எலி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்த விதமும் தான். எலி பதுங்கி வாழும் பொந்துக்குள் வாஷ் பேசின் பைப் மற்றும் அது போகும் இடங்களுக்கெல்லாம் நம்மையும் கூட்டி கொண்டு போவது ஒரு புதிய அனுபவம். நிஜ எலியை பயன்படுத்தியே எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள் என்பது மேலும் ஆச்சரிய பட வைக்கும் விஷயம். சூர்யா காதலிக்காக வாங்கி வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருளை எலி பதம் பார்த்து வைக்கும் போது கலகலப்பு களை காட்டுகிறது. இறுதி காட்சியில் எலியை கொல்லாமல் கதாநாயகன் செய்யும் காரியம் வியக்க தகுந்தது மட்டுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அந்த ஒரு மெசேஜுக்கே கொடுத்த காசு சரியாக போகும்.
குறை என்று பார்த்தால் எலியால் கதாநாயகனுக்கு நிகழும் பிரச்சினைகள் மிக மேலோட்டமாக இருக்கின்றன. அதே போல் அவருக்கும் இளம் பெண்ணுக்கும் வரும் காதலிலும் அழுத்தமில்லை. வைர கடத்தல் காரன் கிளை கதை படத்துக்கு எந்த பலமும் சேர்க்கவில்லை தவிர கதையோட்டத்தை அது பெரிதும் பாதித்திருக்கிறது. குழந்தைகளை குறி வைக்கும் இந்த படத்தில் அவர்களை திருப்தி படுத்த பெரிதாக காட்சிகள் இல்லை என்பதும் பெரிய குறை. இடைவேளைக்கு பிறகு படுத்து விடும் திரைக்கதை கடைசியில் அந்த அற்புத கிளைமாக்ஸால் பிழைக்கிறது.
ஒரு நாள் கூத்து போலவே ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திலும் மிக இனிமையான பாடல்களை தந்திருக்கிறார் பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார். படத்துக்கு மிக பெரிய தூணாக செயல்பட்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய் எலியுடைய தாறு மாறு ஓட்டத்தை அப்படியே பதிவு செய்ததிலாகட்டும் பின் அந்த எலியாக காமிரா மாறி செயல்படும்போதும் ஆகட்டும் ஒரு பெரிய சபாஷ் அவருக்கு. சாபு ஜோசஃபின் படத்தொகுப்பும் அருமை. ஒரு வித்தியாசமான கதை களத்தை எடுத்து அதற்காக மெனகெட்டிருக்கும் நெல்சன் வெங்கடேசனை மனதார பாராட்டலாம். திரைக்கதையிலும் கதையோட்டத்தில் உள்ள ஓட்டைகளை அந்த ஒரு உயரிய கருத்தை சொல்லி மறக்க செய்திருக்கிறார் .
எலியின் அட்டகாசமான ஆட்டத்துக்காகவும் உயர்ந்த கருத்தை சொன்னதற்காகவும் மான்ஸ்டரை நிச்சயம் தியேட்டரில் போய் குடும்பத்துடன் பார்க்கலாம்
Comments