செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்திசாலி குரங்கு..!
- IndiaGlitz, [Tuesday,December 03 2019]
சீனாவில் ஒரு குரங்கு அதை வளர்ப்பவரின் செல்போனைப் பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த குரங்கு சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி, சீனாவின் சாங்ஜோவில் உள்ள யான்செங் காட்டு விலங்கு காப்பகத்தில் பணிபுரியும் எல்வி மெங்மெங் என்ற பெண், தனது கணக்கு வழியாக ஒரு ஆர்டர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு யார் ஆர்டர் செய்திருப்பார்கள் என்று சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்தபோது ஆர்டர் செய்தது வேறு யாருமல்ல அவருடைய செல்லப் பிராணி குரங்குதான் என்பது தெரியவந்தது.
தனது குரங்கு பசியுடன் இருப்பதை உணர்ந்த மெங்மெங் தனது தொலைபேசியில் தினசரி தேவைகளை ஆர்டர் செய்ய இருந்தார். இடையில் வேலை காரணமாக அதை நிறுத்திவிட்டு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றார்.மீண்டும் திரும்பி வந்தபோது, ஆர்டர் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தார். குழப்பமடைந்த அவர், அந்த செயலுக்கு பின்னால் இருப்பது குரங்கு தான் என்று கண்டுபிடித்தார். இது பற்றி மெங்மெங் கூறுகையில், ஆன்லைனில் மளிகை சாமான்களை அடிக்கடி ஆர்டர் செய்ததாகவும், அவளுடைய குரங்கு அதைக் கற்றுக் கொண்டு அதைப் பிரதிபலித்திருக்கலாம் என்றும் கூறினார்.அதோடு, அந்த குரங்கு தேவையான பொருட்களையே ஆர்டர் செய்திருந்ததால் ஷாப்பிங்கை ரத்து செய்யவில்லை என்று மெங்மெங் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.