குரங்கு செல்பி காப்புரிமை வழக்கில் பீட்டாவுக்கு கிடைத்த தோல்வி
- IndiaGlitz, [Wednesday,April 25 2018]
கடந்த சில ஆண்டுகளாக சிம்பன்ஸி குரங்கு ஒன்று எடுத்த செல்பி புகைப்படம் உலகம் முழுவதும் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு காப்பீடு கோர குரங்கிற்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர் டேவிட் என்பவர் காட்டுப்பகுதியில் புகைப்படங்களை எடுத்தார். பின்னர் ஒரு இடத்தில் கேமிராவை வைத்துவிட்டு வேறொரு இடத்திற்கு அவர் சென்றுவிட்டார். இந்த இடைப்பட்ட நேரத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒன்று அந்த கேமிராவை எடுத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்தது. மேலும் தன்னைத்தானே செல்பி புகைப்படங்களையும் எடுத்தது.
இந்த புகைப்படங்களை தற்செயலாக பார்த்த டேவிட் பின்னர் அந்த புகைப்படங்களை இணையதளங்களில் பதிவு செய்தார் இந்த புகைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது
இந்த நிலையில் பீட்டா நிறுவனம், இந்த புகைப்படத்தின் காப்புரிமை அந்த குரங்குக்கே கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், காப்புரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உண்டான உரிமையாகும். குரங்கு போன்ற விலங்கினங்களுக்கு எல்லாம் இதை அளிக்க இயலாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பீட்டா அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பிலும் ‘காப்புரிமை சட்டங்கள் விலங்குகள் உரிமை கோர உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அவ்வாறு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பு, தாங்கள் அந்த படத்தில் உள்ள குரங்கின் நண்பர் அல்லது உறவினர் என்பதையும் நிரூபிக்க தவறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த தீர்ப்பின் மூலம் இந்த புகைப்படங்கள் புகைப்படக்கலைஞர் டேவிட்டுக்குத்தான் உரிமை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.