குரங்குக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட்
- IndiaGlitz, [Saturday,October 06 2018]
ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர்கள் அந்த பேருந்தின் டிரைவர் கையில்தான் இருக்கும். அந்த பொருப்பை உணர்ந்து டிரைவர்கள் தனது பணியை செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் முதல் பாடம். ஆனால் பயணிகளின் உயிர்களை பற்றி கவலைப்படாமல் கர்நாடக மாநிலத்தில் ஒரு பேருந்தின் டிரைவர் குரங்கின் கையில் ஸ்டியரிங்கை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரியும் பிரகாஷ் என்பவர் சமீபத்தில் தேவநகரியில் இருந்து பரமசாஹராவுக்கு செல்லும் பேருந்து ஒன்றை ஓட்டிச் சென்றார். அந்த பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்த நிலையில் அவர் ஒரு குரங்கிடம் ஸ்டிரியங்கை கொடுத்து அதனிடம் அப்படி ஓட்டு, இப்படி ஓட்டு என்று அதற்கு டிரைவிங் கற்று கொடுக்க முயற்சித்தார். குரங்கும் அவர் கூறியபடி ஸ்டிரியங்கை அங்கும் இங்கும் ஆட்டியது. இதைக் கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து பேருந்து ஓட்டுனரை கண்டித்தனர். ஆனால் பயணிகளின் குரலை மதிக்காமல் அவர் குரங்கிடம் விளையாடி கொண்டிருந்தார். இதனை ஒரு பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதனையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பிரகாஷை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், விசாரணை முடியும் வரை அவர் பேருந்தை இயக்க முடியாது என்றும் போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.