சொத்துக்காக மகளையே வீட்டுச்சிறை வைத்த தாய்! கல்வி வள்ளல் குடும்பத்தில் புது சிக்கல்
- IndiaGlitz, [Friday,June 30 2017]
பிரபல கல்வி வள்ளலும், சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஜேப்பியார் அவர்கள் கடந்த ஆண்டு காலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜேப்பியார் அறக்கட்டளையை அவரது மனைவி ரெமி நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்குரிய சொத்துக்களை தரமறுப்பதோடு தன்னை வீட்டுச்சிறையில் தன்னுடைய தாயாரே வைத்துள்ளதாக ஜேப்பியார்-ரெமி தம்பதியின் இரண்டாவது மகள் ஷீலா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவருடைய புகார் மனுவில் தன்னுடைய கணவர் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன்பின்னர் தனது தந்தை ஜேப்பியார் இல்லமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய தாயார் ரெமி தனக்கு தனியாக ஒரு அறக்கட்டளை உருவாக்கி தருவதாகவும், அதனால் தான் ஏற்கனவே உள்ள ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். தாயாரின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமா செய்துவிட்டதாகவும், அதன்பின்னர் ஒருவருடம் ஆகிய பின்னரும் தனக்கு அறக்கட்டளை அமைத்து தர மறுப்பது மட்டுமின்றி தன்னை வீட்டுச்சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தன் தந்தையின் மற்ற வாரிசுகளுக்கு உரிய சொத்துரிமையை தனக்கும் பெற்றுத்தரும்படியும் தன்னை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.