தமிழ் இருக்கைக்கு நிதிதிரட்ட மொய்விருந்து நடத்திய டெக்சாஸ் தமிழர்கள்
- IndiaGlitz, [Sunday,November 19 2017]
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சியம் ஆகிய 7 மொழிகள் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் தமிழ் மொழியைத் தவிர மற்ற 6 மொழிகளுக்கும் இந்த பல்கலையில் இருக்கை உள்ளது. எனவே தமிழுக்கும் இருக்கை பெற தமிழ் ஆர்வலர்கள் உலகெங்கும் நிதி திரட்டி வருகின்றனர்.
இந்த இருக்கைக்காக தமிழக அரசு ரூ.10 கோடியும், கமல்ஹாசன், விஷால், ஜிவிபிரகாஷ் உள்பட பல திரையுலகினர்களும் நிதியளித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாண தமிழர்கள் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்க்க மொய் விருந்து நடத்தியுள்ளனர். இந்த மொய்விருந்தை சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கா வாழ் மென்பொறியாளர் பிரவீனா ஒருங்கிணைத்து நடத்துகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியானது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது.
ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்காக இருக்கை பெற பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் பேராசியர்களும் தன்னார்வல இளைஞர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தமிழனின் கனவான தமிழ் இருக்கை வெகுவிரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.