த்ரிஷா நடிக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் முதல் படம், அதிலும் பேய்ப்படம் என்றாலே ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் தந்துள்ள இந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை பார்ப்போம்.
லண்டனில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் வில்லனை தனது புத்திசாலித்தனத்தால் ரிஸ்க் எடுத்து போலீசில் பிடித்து கொடுக்கின்றார் த்ரிஷா. இதனால் ஆத்திரமடையும் வில்லன், த்ரிஷாவை கொலை செய்கிறார். மீண்டும் வந்து பழிவாங்குவேன் என்று சபதமிட்டு மரணம் அடையும் த்ரிஷா, ஆவி வடிவில் அவரை போலவே இருக்கும் இன்னொரு உருவத்தை இரண்டு வருடமாக தேடுகிறார். அப்போது சமையல் கலை வல்லுனர் த்ரிஷா தென்படவே அவரை லண்டனுக்கு வரவழைத்து அவருடைய உடம்பில் புகுந்து வில்லனை பழிவாங்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சியை சாமியார்கள் தடுக்க முயல்கின்றனர். மோகினி த்ரிஷாவின் சபதம் நிறைவேறியதா? அல்லது சாமியார்களின் பூஜை வென்றதா? என்பதே மீதிக்கதை.
மோகினி, வைஷ்ணவி என்ற இரண்டு கேரக்டர்களில் ஏற்று நடித்திருக்கும் த்ரிஷா இந்த படத்திற்காக தன்னுடைய அதிகபட்ச நடிப்பை கொடுத்துள்ளார். அமைதியான வைஷ்ணவி, ஆர்ப்பாட்டமான மோகினி என இரண்டு வித வித்தியாசமான கெட்டப்புகளில் உள்ளார். குறிப்பாக மோகினி கேரக்டருக்காக ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்தும் கொஞ்சம் கவர்ச்சியை வெளிப்படுத்தியும் நடித்துள்ளார். இந்த படத்தை பொருத்தவரையில் த்ரிஷாவின் பங்களிப்பு ஓகே.
ஜாக்கி என்ற பாலிவுட் நடிகர் தான் ஹீரோ. படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துதான் வருகிறார். த்ரிஷாவுடன் இரண்டு டூயட் பாட்டு பாடிவிட்டு பின்னர் திடீரென பிசினஸ் டூர் கிளம்பிவிட்டு மீண்டும் கிளைமாக்ஸில் கலந்து கொள்கிறார்.
யோகிபாபு, லொள்ளுசபா சுவாமிநாதன், கணேஷ் (ஆர்த்தி கணவர்), மதுமிதா ஆகிய நான்கு காமெடி நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர். ஆனால் காமெடி இருக்கின்றதா? என்ற கேள்வியை தயவுசெய்து யாரும் கேட்டுவிட வேண்டாம்.
பூர்ணிமா பாக்யராஜ், சுரேஷ், 'போக்கிரி' வில்லன் முகேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.
விவேக்-மெர்வின் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. ஒரு பேய்ப்படத்திற்குரிய பயமுறுத்தும் பின்னணி இசையும் இல்லை. குருதேவ் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளன.
பேய்ப்படம் என்றால் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பழிவாங்கும் படலமாகத்தான் உள்ளது. இதுவரை நாம் பார்த்த பேய்ப்படங்களில் வில்லன், நாயகன் அல்லது நாயகியை கொலை செய்வார், அந்த நபர் ஆவியாகி இன்னொரு உடலில் புகுந்து பழிவாங்கும், அந்த உடம்பில் இருந்து ஆவியை விரட்ட பூஜைகள், யாகங்கள் நடத்தப்படும், கிரகணம் அன்று நடத்தப்படும் இந்த பூஜையால் ஆவி, அந்த உடலை விட்டு கிராபிக்ஸ் காட்சிகளின் உதவியால் வானத்திற்கு சென்றுவிடும். இதுவரை நாம் பல படங்களில் பார்த்த இந்த காட்சிகள் அனைத்தும் இந்த படத்திலும் உள்ளது. இயக்குனர் மாதேஷ் காட்டிய ஒரே ஒரு வித்தியாசம், கதை நடக்கும் இடம் லண்டன். மற்றபடி இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான காட்சி ஒன்றை இந்த படத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசை கூட தைரியமாக அறிவிக்கலாம். ஒரு படத்தில் யோகிபாபு இருந்தும் தியேட்டரில் ஒரு கலகலப்போ, சிரிப்பு சத்தமோ இல்லை என்பது அனேகமாக இந்த படமாகத்தான் இருக்கும். தியேட்டரில் ஆள் இருந்தால்தானே சிரிப்பு சத்தம் கேட்கும் என்பது வேறு விஷயம். 'நீதி நேர்மைன்னு பேசறவங்க ஒண்ணு ஏழையா இருக்காங்க அல்லது போராளியா இருக்காங்க' என்று வில்லன் சொல்லும்போது, 'பாவம் பண்றவங்க ஒண்ணு பணக்காரங்களா இருப்பாங்க, இல்ல பதவில இருப்பாங்க' என்ற த்ரிஷா பேசும் வசனம் மட்டும் ரசிக்கும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த வயதிலும் பாவாடை தாவணியில் அழகாக தோன்றும் த்ரிஷாவுக்காக அவரது ரசிகர்கள் மட்டும் ஒருமுறை பார்க்கலாம்.
Comments