மோகன்லால் இயக்கும் முதல் படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

பிரபல நடிகர் மோகன்லால் மலையாலத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர். கடந்த 40 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் மோகன்லால் தற்போது முதல்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

'பரோஸ்' (Barroz) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குழந்தைகளுக்கான ஒரு ஃபேண்டஸி படம் என்றும், இந்த படம் இந்தியாவிற்கு முதல்முறையாக கடல் மார்க்கத்தில் வந்தடைந்த வாஸ்கோடகாமா குறித்த கதை என்றும் மோகன்லால் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

3D டெக்னாலஜியில் உருவாகவிருக்கும் இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி மோகன்லால் டைட்டில் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதுமட்டுமின்றி முக்கிய வேடங்களில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான Paz Vega மற்றும் Rafael Amargo ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் Paz Vega தற்போது தயாராகி வரும் 'ஃபர்ஸ்ட் பிளட்' படத்தின் அடுத்த பாகத்தில் சில்வர்ஸ்டன் ஸ்டோலோன் அவர்களுடன் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தியாவின் முதல் 3D படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தை இயக்கிய ஜிஜோ அவர்களிடம் பேசி கொண்டிருந்தபோது தான் இந்த படத்தின் கதை உருவானது என்றும், குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் ஒரு வரலாற்று ஆய்வுப்படமாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கோவாவில் நடைபெறவிருப்பதாகவும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மோகன்லாலில் இயக்கத்தில் உருவாகும் முதல் படமே வித்தியாசமான படமாக இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.