மருத்துவர்கள் மீதான வன்முறை… அறிவுரை கூறி கண்டிக்கும் சினிமா பிரபலங்கள்!
- IndiaGlitz, [Thursday,June 10 2021]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் முதலே கொரோனா பரவல் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள் என அனைவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இந்திய மருத்துவச் சங்கத்தின் அறிக்கையின்படி 1400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
இப்படி இருக்கும்போது நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இத்தகைய செயல்களைக் கண்டித்து தற்போது மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதோடு இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் கடும் மனவேதனை அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவர்கள் மீதான வன்முறைக்கு மலையாள நடிகர் பிருத்விராஜ், மோகன்லால், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் நடிகர் பிருத்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “மருத்துவர்கள்தான் கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் போர் வீரர்கள், மருத்துவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் மோகன்லால் அவர்கள், “கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு எதிரான அட்டூழியங்கள் கண்டிக்கத்தக்கது” எனக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அவர்களும் “கொரோனா நேரத்தில் தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும்“ எனவும் வேண்டுகோள் வைத்துள்ளர். சினிமா பிரபலங்களின் இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து தற்போது சோஷியல் மீடியாவில் “STOP ATTACK ON DOCTOR” எனும் ஹேஷ்டேக் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.