திருக்குறளுடன் உரையை முடித்த பிரதமர் மோடி
- IndiaGlitz, [Thursday,April 12 2018]
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இன்று தமிழகத்திற்கு வந்த பாரத பிரதமர் நரேந்திரமோடி, சென்னை அருகில் உள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் 'காலை வணக்கம்' என்று தமிழில் கூறியது மட்டுமின்றி திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து ஒரு குறளை கூறி அதற்கு பொருளையும் கூறினார்.
பிரதமர் கூறிய குறள் இதுதான்:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
இந்த குறளை சற்று உச்சரிப்பு பிழையுடன் அவர் கூறினாலும், இந்த குறளுக்கு உரிய விளக்கமான 'ஆற்று மணலில் நாம் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் ஊறும். அதோபோல் மக்கள் கல்வி கற்க, கற்க அறிவு வளர்ச்சி பெறும் என்பதை பிரதமர் மோடி தெளிவான தமிழில் உச்சரித்து கூறினார். இதனையடுத்து அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேலும் பிரதமர் மோடி பேசியபோது, 'மிகச்சிறந்த மாநிலமான தமிழகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த இடத்தில் கூடியிருக்கும் உங்கள் முன் பேசுகையில் தான் பெருமைப்படுவதாகவும், தமிழகம் என்பது சோழ அரசர்கள் காலத்திலேயே மிகப்பெரிய கடற்படை வைத்திருந்த பெருமைக்கு உரியது என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.