மோடியின் அடுத்த அதிரடி. தங்கம் வைத்திருக்க திடீர் கட்டுப்பாடு
- IndiaGlitz, [Thursday,December 01 2016]
பாரத பிரதமர் மோடி சமீபத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் கருப்புப்பண முதலைகள் வெளிவராமல் உள்ளனர். ஒருசிலர் தங்களிடம் உள்ள கருப்புப்பணத்தை தங்கமாக மாற்றி வருகின்றனர். பிரதமரின் அறிவிப்பு வெளியான அன்றே விடிய விடிய தங்க நகைக்கடைகளில் வியாபாரம் நடந்ததே இதற்கு சான்று.
இந்நிலையில் மத்திய அரசு தங்கம் இருப்பு வைத்திருக்கவும் தற்போது கட்டுப்பாட்டு வைத்துள்ளது. இதன்படி தனி நபர் ஒருவர் திருமணமான பெண்ணாக இருந்தால் அதிகபட்சமாக 500 கிராம் வரையிலும், திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால் 250 கிராம் வரையிலும் தங்கம் வைத்துக்கொள்ளலாம். மேலும் ஆண்கள் 100 கிராம்களுக்கு மேல் தங்கம் வைத்திருக்க கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி சோதனையின்போது மேற்கண்ட அளவில் தங்கம் வைத்திருந்தால் அது பறிமுதல் செய்யப்படாது.
அதேசமயம் அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. மேலும் பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள அளவுகளுக்கு மேல் தங்கம் வைத்திருந்து வருமான வரித்துறை சோதனையின் பிடிபட்டால் கூடுதல் தங்கத்துக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.