மீனவர் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இனியும் வேடிக்கை பார்க்கலாமா மத்திய மாநில அரசுகள்?

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதோடு அவர்களுடைய படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைப்பது என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமைகள் நடந்து வருகிறது. இந்த கொடுமைக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை என்ன தீர்வு செய்துள்ளது என்று மீனவர்கள் கொந்தளிக்கின்றனர்.
இலங்கை கடற்படையினர்களின் அட்டகாசம் தற்போது ஒருபடி முன்னேறி கண்மூடித்தனமாக சுடவும் செய்துள்ளனர். இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு மீனவரின் உயிர் அநியாயமாக பலி ஆகியுள்ளது, சுட்டு கொல்லும் அளவுக்கு மீனவர்கள் என்ன தீவிரவாதிகளா? மீனவர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா?
மீனவர்களுக்கு எல்லைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இரு நாட்டு மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டி வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது; மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த ஒப்பந்தம் பேப்பரில் மட்டுமே ஒப்பந்தமாக உள்ளது. நடைமுறை அதற்கு எதிர்மாறாக உள்ளது.
இலங்கையை நட்பு நாடு என்று எண்ணி இனியும் தாமதிக்காமல் இந்த கொடுமைக்கு உடனே முடிவு கட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். மாநில முதல்வரும் உடனடியாக பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களையும் மத்திய அரசு அதிகாரிகளையும் உடனடியாக சந்தித்து இனி ஒரு மீனவர் உயிர் பலியாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.