பணம் கொடுக்காததால் வங்கி ஊழியர் முன் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
- IndiaGlitz, [Wednesday,December 21 2016]
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் ரூபாய் நோட்டுக்களை கண்களால் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அத்தியாவசிய தேவைக்கு கூட வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் உடல்நலமில்லாத ஒரு இளம்பெண் தன்னுடைய சிகிச்சைக்குகூட வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23வயது கிரிஜா என்ற கல்லூரி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பணம் எடுக்க அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.2000 பணம் எடுக்க சென்றார்.
ஆனால் KYC ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி அவருக்கு பணம் தர வங்கி ஊழியர்கள் மறுத்துவிட்டனர். கடந்த பலமுறை பணம் எடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்த கிரிஜா, நேற்று திடீரென பணம் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரி முன் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.