காயம் அடைந்த ரயில் பயணிகளுக்கு கட்டுக்கட்டாக பணம் வழங்கிய மர்ம நபர்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

நேற்று முன் தினம் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள், கான்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் ரயில்வே நிர்வாகம் நிவாரண உதவி வழங்கியதாக கூறி கட்டுக்கட்டாக செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை கொடுத்து சென்றுள்ளனர். இந்த பணத்தை யார் கொடுத்தது என்று தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
142 பேரை பலிகொண்ட இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பத்திற்கும், காயம் அடைந்தவர்களுக்கும் மத்திய அரசு நிவாரண உதவி அறிவித்துள்ள நிலையில் நேற்று திடீரென காயமடைந்தவர்களுக்கு கருப்புப்பணம் வைத்துள்ள சிலர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை சிகிச்சை பெற்று வருபவர்களின் கொடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம் வழங்கியதாக அந்த மர்ம நபர்கள் கூறியிருந்தனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் இதை மறுத்துள்ளதால் இந்த பணம் கருப்புப்பணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக பிரமுகர் ஆர்.பி.சிங் கூறும்போது, யாரேனும் அரசியல்வாதிகள் அல்லது, ரயில்வே அதிகாரிகள் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை இவ்வாறு விநியோகித்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் உடனடியாக தகவல் தெரிவித்துவிட்டதாக தெரிவித்தார்
கான்பூர் மண்டல போலீஸ் கமிஷனர் இப்திகாருதின் இதுகுறித்து கூறியபோது காலாவதியான ரூபாய் தாள்கள் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விநியோகிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.