ரூபாய் நோட்டு நடவடிக்கை. பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுள்ள 10 கேள்விகள்
- IndiaGlitz, [Wednesday,November 23 2016]
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யாததால் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த அதிரடி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மக்களின் கருத்துக்கணிப்பை கேட்க முடிவு செய்துள்ளார். இதற்காக பிரதமரின் செயலியில் பத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பத்து கேள்விகள் பின்வருமாறு:
1. இந்தியாவில் கருப்புப் பணம் உள்ளது என நினைக்கிறீர்களா?
2.ஊழல் பேயும், கருப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டியன என எண்ணுகிறீர்களா?
3.ஒட்டுமொத்தமாக கருப்புப் பண ஒழிப்பில் அரசின் அணுகுமுறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும்
4.ஊழலை ஒழிக்க மோடி அரசின் முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 1 முதல் 5 என்ற அளவீட்டில்- மிகவும் பாராட்டத்தக்கது, மிக நன்று, நன்று, பரவாயில்லை, தேவையில்லாதது என மதிப்பளிக்கவும்.
5. 500ரூ மற்றும் 1000ரூ பழைய நோட்டுகளை ஒழிக்க மோடி அரசு எடுத்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.)சரியான திசையில் செல்லும் மிகச்சரியான முடிவு. ஆ.)நல்ல முடிவு இ.)எந்த பயனும் இருக்காது
6.நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் என நினைக்கிறீர்களா? அ) உடனடியாக உதவும் ஆ.)சில காலம் சென்றோ, நாட்பட்டோ உதவும் இ.)குறைந்தபட்ச உதவிதான் இருக்கும். ஈ) தெரியவில்லை.
7.நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, மருத்துவம் ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டும் வகையில் விலை குறையும். அ)கண்டிப்பாக ஆ)ஓரளவுக்கு இ)சொல்ல முடியாது
8.ஊழல், கருப்புப்பணம், பயங்கரவாத மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் நீங்கள் அனுபவித்த அசிரத்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்களா? அ) நிச்சயம் இல்லை. ஆ)ஓரளவுக்கு. ஆனால் அது என் கடமை. இ.ஆம்
9.ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் இப்போது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா? அ)ஆம் ஆ)இல்லை
10. இது குறித்து ஏதேனும் ஆலோசனைகளை, எண்ணங்களை பிரதமர் மோடியுடன் பகிர நினைக்கிறீர்களா?
மேற்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க பிரதமரின் செயலியை கூகுள்ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.